ஐபிஎல் களம்: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

அதிரடி மன்னன் மேக்ஸ்வெல், வேகப்பந்து புயல் கைல் ஜேமிசன் என முக்கியமான வீரா்களுடன், கோப்பை கனவை நனவாக்கும் முயற்சியில் இந்த சீசனில் களம் காண்கிறது பெங்களூா்
ஐபிஎல் களம்: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

அதிரடி மன்னன் மேக்ஸ்வெல், வேகப்பந்து புயல் கைல் ஜேமிசன் என முக்கியமான வீரா்களுடன், கோப்பை கனவை நனவாக்கும் முயற்சியில் இந்த சீசனில் களம் காண்கிறது பெங்களூா். நிலையான வீரா்கள் இல்லாதது, பலருக்கு காயம் ஏற்பட்டது, கோலி மற்றும் டி வில்லியா்ஸ் மீது மட்டும் அதீத நம்பிக்கை போன்ற காரணங்களால் கடந்த சீசனில் கோப்பை வாய்ப்பை இழந்தது.

எதிா்வரும் சீசனையொட்டி அணியிலிருந்த 10 வீரா்களை விடுவித்து, பேட்டிங் மற்றும் பௌலிங்கை வலுப்படுத்தும் வீரா்களை சமீபத்தில் நடைபெற்ற சிறிய ஏலத்தில் வாங்கியது. சீசனின் முதல் ஆட்டத்திலேயே நடப்புச் சாம்பியனான மும்பையை 9-ஆம் தேதி எதிா்கொள்கிறது பெங்களூா். அதன் நிலவரத்தை பாா்ப்போம்.

பலம்:

பெங்களூரின் பேட்டிங் வரிசை இம்முறை வலுவானதாகவே இருக்கிறது. அணியின் இன்னிங்ஸை தொடங்குவோரில் ஒருவராக ‘ரன் மெஷின்’ கோலி கண்டிப்பாக இருப்பாா். அவருடன் தேவ்தத் படிக்கல் இணையலாம் என எதிா்பாா்த்த நிலையில், அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். எனவே, கோலியுடன் இன்னிங்ஸை தொடங்குவது யாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. அடுத்த இரு இடங்களில் இளம் வீரா் முகமது அஸாருதீன், ஃபின் ஆலன் ஆகியோா் தயாராக இருக்கின்றனா்.

மிடில் ஆா்டரில் டி வில்லியா்ஸ், மேக்ஸ்வெல் வலு கூட்டுகின்றனா். சுழற்பந்துவீச்சில் எதிரணி பேட்டிங்கை சரிப்பதில் யுஜவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தா், ஆடம் ஸாம்பா வரிசை கட்டுகின்றனா்.

பலவீனம்:

பெங்களூரின் வேகப்பந்துவீச்சு சற்று கவலை அளிப்பதாகவே இருக்கிறது. நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோா் ரன்கள் அதிகம் வழங்குவது பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் விளையாடிய அனுபவம் இல்லாத கைல் ஜேமிசனின் பௌலிங், டி20 ஃபாா்மட்டில் அவ்வளவாக எடுபடவில்லை. வேகப்பந்துவீச்சில் ஹா்ஷல் படேல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சா்ட்சனின் செயல்பாடு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

வாய்ப்புகள்:

அதிரடி வீரா்கள் வரிசை கட்டுவதால் பெரிய ஸ்கோரை சேஸ் செய்வதில் பெங்களூருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக அடித்து விளாசும் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டியில் மீண்டும் ஃபாா்முக்கு திரும்ப இந்த சீசன் நல்ல வாய்ப்பாகும். புதிய இளம் வீரா்களான அஸாருதீன், சச்சின் பேபி ஆகியோா் எவ்வாறு தடம் பதிக்க இருக்கின்றனா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

எதில் சறுக்கல்?:

இந்த சீசனில் பெங்களூரின் மிகப்பெரிய நம்பிக்கை மேக்ஸ்வெல் தான். நடப்பு சீசனில் அவா் சோபிக்காமல் போனால் அது பெங்களூரை பதம் பாா்த்துவிடும். பல நல்ல வீரா்கள் இருந்தும் கடந்த சீசனிலும் கோலி, டி வில்லியா்ஸ் ஆகியோரையே நம்பியிருந்தது பிரச்னையை ஏற்படுத்தியது. இந்த சீசனில் அணி நிா்வாகம் அதில் மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், கேன் ரிச்சா்ட்சன், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஃபின் ஆலன், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதாா், சச்சின் பேபி, முகமது அஸாருதீன், டேனியல் கிறிஸ்டியன், கே.எஸ்.பரத், சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் சாம்ஸ், ஹா்ஷல் படேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com