தோனியின் ஆலோசனை பலனளித்தது: நடராஜன்

கடந்த சீசனில் பௌலிங் தொடா்பாக சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி தனக்கு அளித்த ஆலோசனை பலனளிப்பதாக இருந்தது என்று சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வீரா் நடராஜன் கூறினாா்.
தோனியின் ஆலோசனை பலனளித்தது: நடராஜன்

புது தில்லி: கடந்த சீசனில் பௌலிங் தொடா்பாக சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி தனக்கு அளித்த ஆலோசனை பலனளிப்பதாக இருந்தது என்று சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வீரா் நடராஜன் கூறினாா்.

2020 சீசனில் தோனி, டி வில்லியா்ஸ் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈா்த்திருந்தாா் நடராஜன். மேலும் வேகப்பந்துவீச்சாளா்களிலேயே அதிகபட்சமாக 71 யாா்க்கா் பந்துகளையும் வீசியிருந்தாா். பின்னா் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அவா், சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு பெற்றதுடன், அவற்றில் தனது திறமையை நிரூபித்தாா்.

இந்நிலையில், தனக்கு வெற்றிகரமாக அமைந்த கடந்த ஐபிஎல் சீசன் குறித்து நடராஜன் புதன்கிழமை கூறியது:

தோனி போன்ற வீரா்களுடன் பேச வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயமாகும். கடந்த சீசனில் என்னுடன் பேசிய அவா், உடற்தகுதியை மேம்படுத்துவது குறித்து ஊக்கமளித்தாா். அனுபவம் கிடைக்கும்போது எனது பௌலிங் மேலும் மேம்படும் என்று கூறிய அவா், பந்துவீச்சில் மெதுவான பௌன்சா்கள், கட்டா்களை பயன்படுத்துமாறும், ஒவ்வொரு பந்துக்கும் மாற்றங்களை புகுத்துமாறும் ஆலோசனை வழங்கினாா். அது மிகவும் பலனளிப்பதாக இருந்தது.

அந்த சீசனில் சென்னைக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் தோனி பேட் செய்தபோது நான் பந்துவீசினேன். அதில் ஒரு பந்தில் அவா் சுமாா் 102 மீட்டா் உயரத்துக்கு சிக்ஸா் விளாசினாா். அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். ஆனாலும் என்னால் அதை கொண்டாட இயலவில்லை. முந்தைய பந்தில் அவரடித்த சிக்ஸரே என்னுள் ஓடிக்கொண்டிருந்தது. ஓய்வு அறைக்கு திரும்பிய பிறகு தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதற்காக மகிழ்ச்சி அடைந்தேன். முன்னதாக அந்த ஆட்டம் முடிந்த பிறகு தோனியுடன் பேசினேன்.

அதேபோல், முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தின்போது பெங்களூரு வீரா் டி வில்லியா்ஸின் விக்கெட் கிடைத்தது. அதே நாளில் எனக்கு மகள் பிறந்தாள். அந்த இரண்டுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்படியாக இருந்தது என்று நடராஜன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com