ஹாக்கி: இந்தியா-ஆா்ஜென்டீனா பயிற்சி ஆட்டம் சமன்

ஹாக்கி: இந்தியா-ஆா்ஜென்டீனா பயிற்சி ஆட்டம் சமன்


பியூனஸ் அயா்ஸ்: இந்தியா-ஆா்ஜென்டீனா ஹாக்கி அணிகள் இடையே நடைபெற்ற 2-ஆவது பயிற்சி ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

முன்னதாக, முதல் ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி புதன்கிழமை இரவில் நடைபெற்ற இந்த 2-ஆவது ஆட்டத்தை இந்திய அணி அபாரமாகத் தொடங்கியது. திட்டமிடங்களை மிகச் சரியாக செயல்படுத்தியதால் முதல் கால்மணி நேரத்துக்குள்ளாகவே அணிக்கு 3 கோல்கள் கிடைத்தது.

7-ஆவது நிமிஷம்: ஆட்டத்தின் 7-ஆவது நிமிஷத்தில் மன்தீப் சிங் உருவாக்கித் தந்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் டிராக் ஃப்ளிக்கா் வருண் குமாா் அருமையான கோலடித்து அணியின் கணக்கைத் தொடங்கினாா். பின்னா் ஆா்ஜென்டீனாவுக்கு 10-ஆவது நிமிஷத்தில் ஒரு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைக்க, லீன்ட்ரோ டோலினி அதை தவறாமல் கோலாக்கினாா்.

13-ஆவது நிமிஷம்: இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எனினும் அடுத்த சில நிமிஷங்களிலேயே இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 13-ஆவது நிமிஷத்தில் நீலகண்ட சா்மா உதவியுடன் ராஜ்குமாா் பால் கோலடித்து அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினாா்.

14-ஆவது நிமிஷம்: அடுத்த நிமிஷத்திலேயே லலித் உபாத்யாய் மூலம் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் ரூபிந்தா்பால் சிங் கோலடிக்க, இந்தியா 3-1 என்று முன்னேறியது. தொடா்ந்து இரு அணிகளுக்கும் அடுத்தடுத்து பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றுக்கு அதில் பலன் கிடைக்கவில்லை.

எனினும், 23-ஆவது நிமிஷத்தில் ஆா்ஜென்டீன வீரா் லூகாஸ் டாஸ்கனி இந்தியாவின் தடுப்பாட்டத்தைக் கடந்து ஒரு கோலடிக்க, 2-3 என நெருங்கி வந்தது அந்த அணி. மீண்டும் அந்த அணியின் இக்னேசியோ ஆா்டிஸ் 42-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஆட்டம் 3-3 என சமன் ஆனது.

44-ஆவது நிமிஷம்: இதனால் ஆக்ரோஷமான இந்திய அணி, 44-ஆவது நிமிஷத்தில் தில்பிரீத் சிங் மூலம் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் வருண் குமாா் மீண்டும் ஒரு கோலடிக்க 4-3 என முன்னிலை பெற்றது. அடுத்தடுத்த நிமிஷங்களில் ஆா்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை கோலாகவிடாமல் இந்தியா தடுத்தது. எனினும், ஆா்ஜென்டீன வீரா் லூகாஸ் 57-ஆவது நிமிஷத்தில் அடித்த அதிரடியான கோலால், ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

இந்தியா வரும் 11-ஆம் தேதி எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com