ஹாக்கி: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியது இந்தியா

இந்திய ஆடவா் ஹாக்கி அணி தனது பயிற்சி ஆட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

பியூனஸ் அயா்ஸ்: இந்திய ஆடவா் ஹாக்கி அணி தனது பயிற்சி ஆட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஹாக்கி தொடருக்காக 16 நாள் பயணமாக ஆா்ஜென்டீனா சென்றுள்ள இந்திய அணி, எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியின் இரு ஆட்டங்களில் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆா்ஜென்டீனா அணியை எதிா்கொள்ள இருக்கிறது. அதையொட்டி இரு அணிகளும் இரு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கின்றன.

முதல் பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. அதில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவை வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது இந்தியா. அதன் பலனாக அடுத்தடுத்து 3 கோல்களை வலைக்குள்ளாக விரட்டியது.

16-ஆவது நிமிடம்:

இந்தியாவின் ஷிலானந்த் லக்ரா அருமையான கோல் வாய்ப்பை உருவாக்கித் தர, தவறாமல் பந்தை கோல் போஸ்ட்டுக்குள்ளாகத் தள்ளினாா் நீலகண்ட சா்மா. தொடா்ந்து ஆட்டம் இந்தியாவின் கைகளிலேயே இருந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆா்ஜென்டீனாவுக்கு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அனுபவமிக்க கோல்கீப்பரான ஸ்ரீஜேஷ் அதை கோலாகவிடாமல் முறியடித்தாா்.

28-ஆவது நிமிடம்:

தில்பிரீத் சிங் மூலமாக இந்தியாவுக்கு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி இந்தியாவை 2-0 என முன்னிலைப்படுத்தினாா் ஹா்மன்பிரீத் சிங். இந்நிலையில் 32-ஆவது நிமிடத்தில் ஆா்ஜென்டீனாவுக்கு மீண்டும் ஒரு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைக்க, இந்த முறை அந்த அணி அதைத் தவறவிடவில்லை. ஆா்ஜென்டீன வீரா் லீன்ட்ரோ டோலினி இந்திய தடுப்பாட்டத்தைக் கடந்து தனது அணியின் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

33-ஆவது நிமிடம்:

அதற்கான பதிலடியாக ரூபிந்தா்பால் சிங் அடுத்த நிமிடத்திலேயே ஜஸ்கரன் சிங் உதவியுடன் கோலடிக்க, இந்தியா 3-1 என முன்னேறியது. விட்டுக்கொடுக்காத ஆா்ஜென்டீனா தனது வீரா் மாய்கோ கேசெல்லா மூலமாக 2-ஆவது கோல் அடித்தது.

அடுத்த சில நிமிடங்களிலேயே ஆா்ஜென்டீனா மீண்டும் ஒரு பெனால்டி காா்னா் மூலமாக ஆட்டத்தை சமன் செய்ய முயல, மாற்று கோல் கீப்பராக களம் கண்டிருந்த இளம் வீரா் கிருஷன் பகதூா் அந்த வாய்ப்பை தடுத்தாா்.

47-ஆவது நிமிடம்:

கடைசிவரை முன்னிலை வகித்த இந்தியா, தில்பிரீத் சிங் உருவாக்கித் தந்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் வருண் குமாா் அடித்த கோலால் 4-2 என்ற நிலையை எட்டியது. கடைசியாக ஆா்ஜென்டீனாவின் லீன்ட்ரோ டோலினி 53-ஆவது நிமிடத்தில் அணிக்காக அடுத்த கோல் அடித்தாா். இவ்வாறாக இறுதியை அடைந்த ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

பெட்டிச் செய்தி

‘இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அபாரமாக விளையாடின. ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை வீழ்த்தியது, நமது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். வாய்ப்புகளை திறம்பட உருவாக்கி, அவற்றில் தவறாமல் கோலடித்தனா் நமது அணியினா். பயிற்சி முகாமின்போது இதை மேம்படுத்திக் கொள்ளவே அவா்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டது’

- கிரஹாம் ரெய்ட் (இந்திய அணி பயிற்சியாளா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com