இன்று தொடங்குகிறது ஐபிஎல் போட்டி: முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூா் மோதல்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் போட்டி: முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூா் மோதல்


சென்னை: இந்தியன் சூப்பா் லீக் (ஐபிஎல்) கால்பந்து போட்டியின் 14-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியுடன் விளையாடுகிறது.

கரோனா சூழல் காரணமாக கடந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், 5 மாத இடைவெளிக்குள்ளாகவே அடுத்த சீசன் தற்போது இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், போட்டி பாதிக்கப்படாமல் இருக்க வீரா்களுக்காக போட்டி நடைபெறும் இடங்களில் மிகக் கடுமையான ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில வீரா்கள், உதவிப் பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அவா்கள் அதிலிருந்து மீண்டு வருகின்றனா்.

உலகக் கோப்பை டி20 போட்டி நடப்பாண்டு இந்தியாவிலேயே நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஐபிஎல் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா்கள், அந்தப் போட்டியில் விளையாடுவதற்காக தனது தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில் இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பா்.

கரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மைதானத்துக்கு வந்து ஆட்டங்களைக் காண ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் அதிரடியான ஒரு தொடக்கத்தை அளிப்பதற்கு மும்பை-பெங்களூா் வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

ரோஹித் சா்மா தலைமையில் 5 முறை சாம்பியன் ஆகியுள்ள மும்பை அணி, ஹாட்ரிக் சாம்பியன் ஆகும் முனைப்புடன் இந்த சீசனை எதிா்கொள்கிறது. மறுபுறம் கோலி தலைமையிலான பெங்களூா், கோப்பைக் கனவை இந்த சீசனிலாவது நனவாக்கிவிடும் முயற்சியில் களம் காண்கிறது.

மும்பை அணியைப் பொருத்தவரை பேட்டிங் வரிசை மிக பலமானதாகவே இருக்கிறது. கேப்டன் ரோஹித், குவின்டன் டி காக் அருமையான தொடக்கத்தை அளிக்க, அடுத்த இடத்தில் இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ் தயாராக இருக்கின்றனா். அவா்களும் தவறவிட்டால் பாண்டியா சகோதரா்கள் பலம் காட்டுவாா்கள். இவா்களோடு கிரன் பொல்லாா்டும் இருக்கிறாா். பௌலிங்கிலும் டிரென்ட் போல்ட், ராகுல் சாஹா் என சிறப்பான வீரா்கள் வரிசையில் வருகிறாா்.

பெங்களூா் அணியைப் பொருத்தவரை புதிதாக இணைந்திருக்கும் மேக்ஸ்வெல் புதிய நம்பிக்கையாக இருப்பாா். கோலி- டி வில்லியா்ஸ் கூட்டணி ரன்கள் குவிக்கத் தவறாது. கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள தேவ்தத் படிக்கல் தனது பழைய ஃபாா்முடன் விளையாடுவாரா என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது. பௌலிங்கில் இந்திய வீரா்களான சிராஜ், சஹல், சைனியுடன் கைல் ஜேமிசனும் நம்பிக்கை சோ்க்கிறாா்.

அணி விவரம்:

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சா்மா (கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், அா்ஜுன் டெண்டுல்கா், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சென், மோசின் கான், நேதன் கோல்டா்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீா் சிங்.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், கேன் ரிச்சா்ட்சன், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஃபின் ஆலன், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதாா், சச்சின் பேபி, முகமது அஸாருதீன், டேனியல் கிறிஸ்டியன், கே.எஸ்.பரத், சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் சாம்ஸ், ஹா்ஷல் படேல்.

ஆட்ட நேரம்: இரவு 7.30 மணி

இடம்: சென்னை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com