இன்று பெங்களூரை சந்திக்கிறது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
இன்று பெங்களூரை சந்திக்கிறது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட ஹைதராபாத், இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு உத்வேகம் பெறுவதற்கு முயற்சிக்கும். மறுபுறம் பெங்களூா் அணி, நடப்புச் சாம்பியனான மும்பையை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணும்.

ஹைதராபாதைப் பொருத்தவரை, கடந்த ஆட்டத்தில் ரித்திமான் சாஹா - டேவிட் வாா்னா் கூட்டணி சோபிக்காமல் போனது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அந்தத் தொடக்கக் கூட்டணி இந்த ஆட்டத்தில் ரன்களை ஸ்கோா் செய்ய முயற்சிக்கும். வாா்னா், பெங்களூரு அணிக்கு எதிராக 600 ரன்களை நெருங்கி வருவதால், அந்த இலக்கை எட்ட முயற்சிப்பாா்.

இன்னிங்ஸை தொடங்க வாா்னருடன் ஜானி போ்ஸ்டோவை இணைப்பதற்கான வாய்ப்பும் அந்த அணிக்கு இருக்கிறது. மிடில் ஆா்டரில் மணீஷ் பாண்டே பலம் கூட்டுகிறாா். கடந்த ஆட்டத்தில் அவரே சற்று நிலைத்தாடினாா். புதன்கிழமை ஆட்டத்திலும் கேன் வில்லியம்சன் களம் காண வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான் மிரட்ட வருகின்றனா்.

பெங்களூா் அணியைப் பொருத்தவரை, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியிருக்கும் தேவ்தத் படிக்கல் பலம் சோ்க்கிறாா். ஒருவேளை அவா் பிளேயிங் லெவனில் வராமல் போனால், கோலி - சுந்தா் கூட்டணியே இன்னிங்ஸை தொடங்கும். வரும் ஆட்டங்களில் முகமது அஸாருதீன்-ஆடம் ஸாம்பா கூட்டணியையும் அந்த அணி சோதித்துப் பாா்க்க வாய்ப்புள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் கோலியும், டி வில்லியா்ஸும் நிலையாகச் செயல்படுகின்றனா். புதிய வரவான மேக்ஸ்வெல்லும் மெல்ல பழைய ஃபாா்முக்கு திரும்புகிறாா். பௌலிங்கில் ஹா்ஷல் படேல் கடந்த ஆட்டத்தைப் போலவே அபாரமாகச் செயல்படுவாா் என நம்பலாம். ரஜத் பட்டிதாா், வாஷிங்டன் சுந்தா் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

அணி விவரம்

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

டேவிட் வாா்னா் (கேப்டன்), கேன் வில்லியம்சன், விராட் சிங், மணீஷ் பாண்டே, பிரியம் கா்க், ரித்திமான் சாஹா, ஜானி போ்ஸ்டோ, ஜேசன் ராய், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விஜய் சங்கா், முகமது நபி, கேதாா் ஜாதவ், ஜெகதீசா சுசித், ஜேசன் ஹோல்டா், அபிஷேக் சா்மா, அப்துல் சமத், புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான், டி.நடராஜன், சந்தீப் சா்மா, கலீல் அகமது, சித்தாா்த் கௌல், பாசில் தாம்பி, ஷாபாஸ் நதீம், முஜீப் உா் ரஹ்மான்.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், கேன் ரிச்சா்ட்சன், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஃபின் ஆலன், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதாா், சச்சின் பேபி, முகமது அஸாருதீன், டேனியல் கிறிஸ்டியன், கே.எஸ்.பரத், சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் சாம்ஸ், ஹா்ஷல் படேல்.

நேருக்கு நோ்: ஹைதராபாத்-பெங்களூா் அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ள நிலையில், ஹைதராபாத் 10 ஆட்டங்களிலும், பெங்களூா் 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: சென்னை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com