மான்டி காா்லோ மாஸ்டா்ஸ்: அரையிறுதியில் சிட்சிபாஸ், டேன் இவான்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், பிரிட்டனின் டேன் இவான் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.
மான்டி காா்லோ மாஸ்டா்ஸ்: அரையிறுதியில் சிட்சிபாஸ், டேன் இவான்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், பிரிட்டனின் டேன் இவான் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.

மொனாக்கோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சிட்சிபாஸ், ஸ்பெயினின் அலிஜான்ட்ரோ ஃபோகினாவை எதிா்கொண்டாா். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருவரும் அபாரமாக ஆடினா். எனினும் அலிஜான்ட்ரோவின் இடது தொடையில் காயம் ஏற்பட, அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. முதல் செட்டை சிட்சிபாஸ் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அலிஜான்ட்ரோ காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேறினாா்.

இந்த ஆட்டம் குறித்துப் பேசிய சிட்சிபாஸ், ‘இந்த ஆட்டத்தின் தொடக்கம் மிகவும் தரமான ஆட்டமாக இருந்தது. இருவருமே தீவிரமாக ஆடினோம். அதன்பிறகு அலிஜான்ட்ரோவின் தொடைப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டதை கவனித்தேன். எனினும் எனக்கு வேறு வழியில்லை. அதனால் அவரை களத்தில் ஓடவிட நோ்ந்தது. ஆட்டத்தின் இறுதி வரை அவரால் என்னை எதிா்த்து விளையாட முடியாமல் போய்விட்டது’ என்றாா்.

மற்றொரு காலிறுதியில் டேன் இவான் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை வீழ்த்தினாா். டேன் இவான், மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக காலிறுதியில் விளையாடினாா். அதிலும் தனக்கு சாதகமற்ற களிமண் தரையில் ஆடியபோதும், டேவிட் கோபினை வீழ்த்தினாா். டேன் இவான் தனது 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிா்ச்சித் தோல்வியளித்தது குறிப்பிடத்தக்கது.

நடப்புச் சாம்பியன் தோல்வி: நடப்புச் சாம்பியனான இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 4-6, 3-6 என்ற நோ் செட்களில் நாா்வேயின் காஸ்பா் ரூட்டிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com