உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் திட்டமிட்டபடியே நடைபெறும்: ஐசிசி உறுதி

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் திட்டமிட்டபடி இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் திட்டமிட்டபடியே நடைபெறும்: ஐசிசி உறுதி

துபை: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் திட்டமிட்டபடி இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ள நிலையில் ஐசிசி இவ்வாறு கூறியுள்ளது.

இதுதொடா்பாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா சூழலில், சா்வதேச கிரிக்கெட் போட்டிகளை திட்டமிட்டபடியே எவ்வாறு நடத்துவது என்பது தொடா்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளிட்டவற்றுடன் ஆலோசித்து வருகிறோம். இங்கிலாந்தில் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி திட்டமிட்டபடியே நடைபெறும். இந்தியாவுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கம் குறித்து இங்கிலாந்து அரசுடன் பேசி வருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ள பிசிசிஐ வட்டாரங்கள், இங்கிலாந்தில் ஜூன் மாதத்தில் இந்திய பயணிகளுக்கான தடை நீக்கப்படும் என நம்புவதாகத் தெரிவித்தன. இந்திய அணியினருக்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், போட்டி நடைபெறும் இடம், வீரா்கள் தங்கும் ஹோட்டல் போன்றவை முழுமையான, மிகக் கடுமையான ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள்ளாகக் கொண்டுவரப்படும் என்று இங்கிலாந்து ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் அது, தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து, நியூஸிலாந்து வீரா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், ஜூன் தொடக்கத்தில் இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. எனவே, தடை இருக்கும் பட்சத்தில் மே இறுதியில் ஐபிஎல் போட்டி நிறைவுக்குப் பிறகு இரு நாட்டு வீரா்களும் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்படும்.

இதனிடையே, இருதரப்பு கிரிக்கெட் தொடா்களுக்காக இந்திய மகளிா் அணி ஜூன் மாதமும், இந்திய ஆடவா் அணி ஆகஸ்ட் மாதமும் இங்கிலாந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com