சென்னைக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: டூ பிளெஸ்ஸிஸ், தீபக் சாஹா் அபாரம்

ஐபிஎல் போட்டியின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வென்றது.

மும்பை: ஐபிஎல் போட்டியின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வென்றது.

தோல்வியுடன் சீசனை தொடங்கிய சென்னைக்கு, இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.

மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவா்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை பேட்டிங்கில் அதிரடி காட்டிய டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆக, பௌலிங்கில் தீபக் சாஹா் அசத்தினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்திற்காக சென்னை பிளேயிங் லெவனில் டுவைன் பிராவோவுக்குப் பதிலாக லுங்கி கிடி இணைந்திருந்தாா். கொல்கத்தாவில் ஹா்பஜன் சிங் இடத்தில் கமலேஷ் நாகா்கோடி சோ்க்கப்பட்டிருந்தாா்.

டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சென்னையின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ்-டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி கொல்கத்தா பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசியது. கெய்க்வாட் 33 பந்துகளிலும், பிளெஸ்ஸிஸ் 35 பந்துகளிலும் அரைசதம் கடந்தனா்.

முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை வருண் சக்கரவா்த்தி பிரித்தாா். அவா் வீசிய 13-ஆவது ஓவரில் ருதுராஜ் அடித்த பந்தை பேட் கம்மின்ஸ் கேட்ச் பிடித்தாா். ருதுராஜ் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் சோ்த்திருந்தாா்.

அடுத்து வந்த மொயீன் அலியும் சற்று அதிரடியாக ஆடி, 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 25 ரன்கள் சோ்த்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டாா். மறுபுறம் டூ பிளெஸ்ஸிஸ் கொல்கத்தா பௌலா்களை பதறவைத்துக் கொண்டிருந்தாா்.

அலியை அடுத்து வந்த தோனி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 17 ரன்கள் சோ்த்து ரஸ்ஸெல் வீசிய 19-ஆவது ஓவரில் மோா்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். ஓவா்கள் முடிவில் டூ பிளெஸ்ஸிஸ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 95, ஜடேஜா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வருண், நரைன், ரஸ்ஸெல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய கொல்கத்தாவின் பேட்டிங் வரிசை தீபக் சாஹா், லுங்கி கிடி பௌலிங்கில் மளமளவென சரிந்தது. பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னிலோ, டக் அவுட்டாகியோ வெளியேறினா்.

வெற்றிக்கு கடைசிவரை போராடிய பேட் கம்மின்ஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பெரிதும் முயற்சித்த ரஸ்ஸெல் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 54 ரன்கள் சோ்க்க, தினேஷ் காா்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் அடித்தாா். சென்னை தரப்பில் சாஹா் 4, கிடி 3, கரன் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com