ருதுராஜ்-டூ பிளெஸ்ஸிஸ் அபாரம்: சென்னை வெற்றி நடை 

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது. 
ருதுராஜ்-டூ பிளெஸ்ஸிஸ் அபாரம்: சென்னை வெற்றி நடை 


புது தில்லி: ஐபிஎல் போட்டியின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது. 
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணிகளில், சென்னைக்கு இது தொடர்ந்து 5-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 5-ஆவது தோல்வி. 
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்து வென்றது. சென்னை இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் - டூ பிளெஸ்ஸிஸ் ஜோடி அட்டகாசம் காட்டியது. 
இந்த ஆட்டத்துக்காக ஹைதராபாத் பிளேயிங் லெவனில் விராட் சிங், அபிஷேக் சர்மா ஆகியோருக்குப் பதிலாக மணீஷ் பாண்டே, சந்தீப் சர்மா இணைந்திருந்தனர். சென்னை அணியில் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடத்தில் லுன்கி எங்கிடி, மொயீன் அலி சேர்க்கப்பட்டிருந்தனர். 
டாஸ் வென்று பேட் செய்த ஹைதராபாதின் இன்னிங்ûஸ வார்னர் - பேர்ஸ்டோ கூட்டணி தொடங்கியது. பேர்ஸ்டோ பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4-ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மணீஷ் பாண்டே, வார்னருடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். இந்தக் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு இந்த ஜோடியை 18-ஆவது ஓவரில் காலி செய்தார் லுன்கி 
எங்கிடி. 
இருவருமே அந்த ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். வார்னர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்கள் சேர்த்திருக்க, பாண்டே 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61 ரன்கள் அடித்திருந்தார். வார்னரை அடுத்து வந்த கேன் வில்லியம்சன் தனது பங்குக்கு கடைசியில் அதிரடி காட்டினார். ஓவர்கள் முடிவில் வில்லியம்சன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, கேதார் ஜாதவ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் லுன்கி எங்கிடி 2, சாம் கரன் 1 விக்கெட் சாய்த்தனர். 
அடுத்து ஆடிய சென்னையில் ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி அட்டகாசமான தொடக்கத்தை அளித்தது. இடைவெளி கிடைத்த இடங்களிலெல்லாம் ருதுராஜ் பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டுக்கே இந்தக் கூட்டணி 129 ரன்கள் குவித்தது. 12 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்திருந்த ருதுராஜை 13-ஆவது ஓவரில் பெளல்டாக்கி வெளியேற்றினார் ரஷீத் கான். 
தொடர்ந்து வந்த மொயீன் அலி 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டாக டூ பிளெஸ்ஸிஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ஜடேஜா, ரெய்னா கூட்டணி சென்னையை வெற்றிக்கு வழி நடத்தியது. ரெய்னாவின் பவுண்டரியில் வெற்றி இலக்கை கடந்தது சென்னை. ரெய்னா 3 பவுண்டரிகளுடன் 17, ஜடேஜா பவுண்டரியுடன் 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.


புள்ளிகள் பட்டியல்


                
சென்னை    6    5    1    10
பெங்களூர்    6    5    1    10
டெல்லி    6    4    2    8
மும்பை    5    2    3    4
கொல்கத்தா    6    2    4    4
பஞ்சாப்    6    2    4    4
ராஜஸ்தான்    5    2    3    4
ஹைதராபாத்    6    1    5    2


சுருக்கமான ஸ்கோர்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


20 ஓவர்களில் 
3 விக்கெட் இழப்புக்கு    171 
மணீஷ் பாண்டே    61
டேவிட் வார்னர்    57
கேன் வில்லியம்சன்    26*
கேதார் ஜாதவ்     12*
பந்துவீச்சு
லுன்கி எங்கிடி    2/35
சாம் கரன்    1/30 
தீபக் சாஹர்    0/21 
ரவீந்திர ஜடேஜா    0/23


சென்னை சூப்பர் கிங்ஸ்

18.3 ஓவர்களில் 
3 விக்கெட் இழப்புக்கு    173 
ருதுராஜ் கெய்க்வாட்     75 
டூ பிளெஸ்ஸிஸ்    56 
சுரேஷ் ரெய்னா    17* 
மொயீன் அலி     15 
பந்துவீச்சு
ரஷீத் கான்    3/36 
சந்தீப் சர்மா    0/24 
சித்தார்த் கெளல்    0/32 
கலீல் அகமது    0/36

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com