பார்சிலோனாவும், மேஜிக் மெஸ்ஸியும்...

 கால்பந்து உலகம் கண்ட தலைசிறந்த ஜாம்பவான்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கிளப்புகளில் ஒன்றான பார்சிலோனா கிளப்புக்கும்
பார்சிலோனாவும், மேஜிக் மெஸ்ஸியும்...

 கால்பந்து உலகம் கண்ட தலைசிறந்த ஜாம்பவான்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கிளப்புகளில் ஒன்றான பார்சிலோனா கிளப்புக்கும் இடையிலான 21 ஆண்டுகால பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
 ஆர்ஜென்டீனா கண்டெடுத்த அற்புதமான வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, இளம் வயதிலேயே ஆகச்சிறந்த கால்பந்து வீரராகத் திகழ்ந்தார்.
 ஆர்ஜென்டீனா நீண்டகாலம் ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருந்த நாடு. அதனால், ஆர்ஜென்டீனா வீரர்கள் பலரும் ஸ்பெயினில் விளையாடுவதும், தொடர்பில் இருப்பதும் சகஜம். மெஸ்ஸியும் அப்படித்தான்.
 அவர் தனது 13-ஆவது வயதில் பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இணைந்தார். தொடக்கத்தில் பார்சிலோனா கிளப்பின் "யூத்' அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, 2004-இல் தனது 17-ஆவது வயதில் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணிக்காக களம்புகுந்தார்.
 அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். அடுத்த சில ஆண்டுகளில் கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். உலகம் முழுவதும் அவருக்கென்று ரசிகர் கூட்டமும் உருவானது.
 மெஸ்ஸியின் அபார ஆட்டம் பார்சிலோனா கிளப்புக்கு பலமாகவும், அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் வகையிலும் அமைந்தது. மெஸ்ஸி தனது அபார ஆட்டத்தால் கோல்களை அடித்துத் தள்ள, பார்சிலோனா வெற்றிகளைக் குவித்தது.
 பார்சிலோனா கிளப்-லயோனல் மெஸ்ஸி இடையிலான ஒப்பந்தம் கடந்த ஜூனில் முடிந்தது. இந்த நிலையில், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பார்சிலோனா கிளப், மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தம் கிடையாது என அறிவித்தது.
 கண்ணீர் மல்க...: ஸ்பெயினின் கேம்ப்நெள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்சிலோனா கிளப்பில் இருந்து பிரியா விடை பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார் மெஸ்ஸி. பிரிவின் வலியைத் தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்ட மெஸ்ஸி,
 "இந்த கிளப்புக்காக பல ஆண்டுகளாக விளையாடியிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே இந்த கிளப்போடுதான். இங்கிருந்து வெளியேறுவது எனக்கு மிகமிகக் கடினமானது. இந்த கிளப்பை பிரிவதற்கு நான் மனதளவில் தயாராகவில்லை.
 எதிர்பாராதவிதமாக பார்சிலோனா கிளப்பை பிரிகிறேன். எனது வாழ்க்கையில் இது மிகக் கடினமான தருணம். இந்த கிளப்புக்காக விளையாடிய காலத்தில் சவாலான தருணங்களையும், தோல்விகளையும் பார்த்திருக்கிறேன். எனினும் தொடர்ந்து விளையாடினேன். ஆனால், இனி விளையாட முடியாது. ஏதோ ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் இந்த கிளப்பிற்கு திரும்பி வருவேன் என நம்புகிறேன்' என்றார்.
 மெஸ்ஸியின் இந்த அறிவிப்பு, பார்சிலோனா கிளப் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. பார்சிலோனா அணிக்காக 18 சீசன்களில் விளையாடியுள்ளார் மெஸ்ஸி. அவருடைய சிறப்பான ஆட்டத்தால் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 4 முறையும், லா லிகா போட்டியில் 10 முறையும், கோபா டெல் ரே போட்டியில் 7 முறையும், ஸ்பெயின் சூப்பர் கோப்பை போட்டியில் 8 முறையும் பார்சிலோனா வென்றுள்ளது.
 672 கோல்: பார்சிலோனா அணிக்காக 778 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 672 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஓர் அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதோடு, பார்சிலோனா கிளப் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ளார் மெஸ்ஸி. ஸ்பெயின் லீகில் மட்டும் 520 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 474 கோல்களை அடித்துள்ளார்.
 இதன்மூலம் ஸ்பெயின் லீகில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையும் மெஸ்ஸி வசமே உள்ளது.
 ஸ்பெயின் லீகில் 8 சீசன்களிலும், சாம்பியன்ஸ் லீகில் 6 சீசன்களிலும் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுதவிர, கிளாசிக் போட்டிகளில் (பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டம்) ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக 26 கோல்களை அடித்துள்ளார். அதுவும் சாதனையாகவே உள்ளது.
 மெஸ்ஸி இல்லாத பார்சிலோனா கால்பந்து கிளப்பை நினைத்துப் பார்ப்பதே ரசிகர்களுக்கு கடினம்தான். மெஸ்ஸியின் இடத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நிரப்ப முடியாது. பார்சிலோனா கிளப்பும், கால்பந்தும் உள்ளவரை மெஸ்ஸி நினைவுகூரப்படுவார்.
 புதிய கிளப்
 மெஸ்ஸி, பார்சிலோனா கிளப்புக்காக ஆடாவிட்டாலும், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) கிளப்புக்காக களமிறங்க இருக்கிறார்.
 பார்சிலோனாவை பிரிந்ததை அடுத்து மெஸ்ஸியை தங்கள் அணிக்கு இழுப்பதில் பல்வேறு கிளப்புகள் தீவிரம் காட்டின. எனினும் பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்ஸி களமிறங்க இருக்கிறார். விரைவில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. அந்த ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸிக்கு ஆண்டுக்கு ரூ.305 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
17  மெஸ்ஸி தனது 17-ஆவது வயதில் பார்சிலோனா அணிக்காக ஸ்பெயின் லீக் (லா லிகா) கால்பந்து போட்டியில் அறிமுகமானார்.
2005 மெஸ்ஸி 2005 மே மாதம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக முதல் கோலை அடித்தார். அப்போது பார்சிலோனா அணிக்காக கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மெஸ்ஸி.
3 மெஸ்ஸி இடம்பெற்ற பார்சிலோனா அணி 2008-09, 2014-15 ஆகிய சீசன்களில் லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கோபா டெல் ரே ஆகிய 3 கோப்பைகளையும் வென்றுள்ளது.
6 லயோனல் மெஸ்ஸி 6 முறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
4 பார்சிலோனா அணி 4 முறை (2005-06, 2008-09, 2010-11, 2014-15) சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பட்டம் வெல்ல மெஸ்ஸி உதவியுள்ளார்.
10 மெஸ்ஸி விளையாடிய காலத்தில் ஸ்பெயின் லீகில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பார்சிலோனா அணி.
672 பார்சிலோனா கிளப்புக்காக 778 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 672 கோல்களை அடித்துள்ளார்.
474 ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் மட்டும் 474 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி.
50 ஸ்பெயின் லீக் கால்பந்து வரலாற்றில் ஒரே சீசனில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையும் மெஸ்ஸி வசமே உள்ளது. 2011-12 சீசனில் 37 ஆட்டங்களில் விளையாடிய மெஸ்ஸி, அதில் 50 கோல்களை அடித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com