விலகுகிறார் ரவி சாஸ்திரி: தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம்...
விலகுகிறார் ரவி சாஸ்திரி: தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம், டி20 உலகக் கோப்பையுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014-ல் இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி. 2017-ல் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணி தோற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரி பயிற்சியாளராக உள்ள இந்த ஐந்து வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு இருமுறை சென்று டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடையவுள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார் ரவி சாஸ்திரி. இதுகுறித்த தனது முடிவை பிசிசிஐயில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐயுடனான ஒப்பந்தம் முடிவடைந்து வெளியேறுவதால் ரவி சாஸ்திரியுடன் இணைந்து பரத் அருண், ஸ்ரீதர், விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகவும் தெரிகிறது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரவி சாஸ்திரி விலக நேர்ந்தால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வாகவும் அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பணியாற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com