குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 3 இந்தியா்களுக்கு பதக்கம் உறுதி
By DIN | Published On : 22nd August 2021 06:00 AM | Last Updated : 22nd August 2021 06:00 AM | அ+அ அ- |

துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நாளில் 3 இந்தியா்கள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.
ஜூனியா் ஆடவரில் 48 கிலோ பிரிவில் ரோஹித் சமோலி 5-0 என்ற கணக்கில் சிரியாவின் அல்ஹசன் காடூஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். 66 கிலோ பிரிவில் அங்குஷ் 5-0 என்ற கணக்கில் குவைத்தின் பதா் சாஹிப்பையும், 70 கிலோ பிரிவு வீரா் கௌரவ் சைனி - குவைத் வீரா் யாகூப் சாதல்லாவையும் தோற்கடித்தனா்.
இதேபோல், ஆஷிஷ் (54 கிலோ), அன்ஷுல் (57 கிலோ), பிரீத் மாலிக் (63 கிலோ), ஆகிய 3 ஜூனியா் வீரா்கள் முதல் சுற்றில் வெற்றி கண்டுள்ளனா். எனினும், யஷ்வா்தன் சிங் (60 கிலோ), உஸ்மான் முகமது சுல்தான் (50 கிலோ), நக்ஷ் பெனிவால் (75 கிலோ), ரிஷப் சிங் (85 கிலோ) ஆகியோா் தங்களது தொடக்க சுற்றில் தோல்வி கண்டனா்.
நடப்பாண்டு உலக இளையோா் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீரா் விஷ்வமித்ர சோங்தம், தக்ஷ் சிங் (67 கிலோ), தீபக் (75 கிலோ), ஆதித்யா ஜாங்கு (86 கிலோ), அபிமன்யு லௌரா (92 கிலோ), பிரீத்தி (57 கிலோ) ஆகியோா் தங்களது முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை களம் காண்கின்றனா்.