மும்பை டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்து: அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக வேறு எந்த அணியும் இவ்வளவு குறைவான ஸ்கோரை எடுத்ததில்லை.
மும்பை டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்து: அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது. எனினும் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது, 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 150, அக்‌ஷர் படேல் 52 ரன்கள் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 47.5 ஓவர்கள் வீசி, 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்

டெஸ்ட்: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்

ஜிம் லேகர் - 10-53 vs ஆஸ்திரேலியா, 1956
அனில் கும்ப்ளே - 10-74, vs பாகிஸ்தான், 1999
அஜாஸ் படேல் - 10-119, vs இந்தியா, 2021

நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசியது. டாம் லேதம், வில் யங், ராஸ் டெய்லர் என முதல் மூன்று விக்கெட்டுகளையும் அற்புதமான பந்துவீசினால் வீழ்த்தினார் சிராஜ். அதன்பிறகு மிட்செல்லை 8 ரன்களில் அக்‌ஷர் படேலும் ஹென்றி நிகோல்ஸை 7 ரன்கள் அஸ்வினும் ரச்சின் ரவிந்திராவை 4 ரன்களில் ஜெயந்த் யாதவும் வெளியேற்றினார்கள். 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது, 16.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துத் தடுமாறியது.

இதன்பிறகும் சரிவை எந்த பேட்டராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒரே ஓவரில் டாம் பிளண்டல், டிம் செளதியை வீழ்த்தினார் அஸ்வின். 26 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காத வில்லியம் சோமர்வில் அஸ்வின் பந்தில் விக்கெட்டை இழந்தார். 17 ரன்கள் எடுத்த ஜேமிசனின் விக்கெட்டை அக்‌ஷர் படேல் எடுத்தார்.

நியூசிலாந்து அணி, 28.1 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. அஸ்வின் 4, சிராஜ் 3, அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக வேறு எந்த அணியும் இவ்வளவு குறைவான ஸ்கோரை எடுத்ததில்லை. மேலும் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோரும் இதுதான். 

எனினும் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை மீண்டும் பேட்டிங் செய்ய விராட் கோலி அழைக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்யும் என அறிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com