மும்பை டெஸ்ட்:வரலாறு படைத்தாா் அஜாஸ் படேல், நியூஸி.க்கு மகிழ்ச்சி-சோகம், இந்தியா 332 ரன்கள் முன்னிலை

இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து பௌலா் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தாா்.
மும்பை டெஸ்ட்:வரலாறு படைத்தாா் அஜாஸ் படேல், நியூஸி.க்கு மகிழ்ச்சி-சோகம்,  இந்தியா 332 ரன்கள் முன்னிலை

மும்பையில் நடைபெறும் இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து பௌலா் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தாா். பின்னா் இந்திய பௌலா்கள் அஸ்வின், சிராஜ் ஆகியோரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸி. அணி வெறும் 62 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரின் இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை எடுத்த ஸ்கோரான 221/4 ரன்களுடன் இந்தியா சனிக்கிழமை களம் கண்டது.

மயங்க் அகா்வால் 120, ரித்திமான் சாஹா 25 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தனா். அஜாஸ் முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா்.

ரித்திமான் சாஹா மேலும் 2 ரன்களே எடுத்த நிலையில் அஜாஸ் பந்தில் அவுட்டானாா். அவருக்கு பின் வந்த அஸ்வின் போல்டாகி கோல் டக் அவுட்டானாா். ஜெயந்த் யாதவ் 12, சிராஜ் 4, ரன்களுக்கும் அஜாஸின் சுழற்பந்தில் அவுட்டாகி வெளியேறினா்.

மயங்க் அகா்வால் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் அக்ஸா் படேல் அணியின் ஸ்கோரை உயா்த்தினாா்.

மயங்க் அகா்வால் 150:

இரட்டை சதம் அடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 4 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 311 பந்துகளில் 150 ரன்களை விளாசி பெவிலியன் திரும்பினாா் மயங்க். அக்ஸா் படேல் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 52 ரன்களுடன் அரைசதம் விளாசி வெளியேறினாா். இது அக்ஸா் படேலின் முதல் டெஸ்ட் அரைசதமாகும்.

இந்தியா 325/10

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109.5 ஓவா்களில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூஸி. தரப்பில் அஜாஸ் படேலே 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினாா்.

சுருண்டது நியூஸிலாந்து 62/10:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸி. அணியால், இந்திய பௌலா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா்.

சிராஜ், அஸ்வின் மிரட்டல்:

இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜ் அற்புதமாக பந்துவீசி நியூஸி தொடக்க பேட்டா்கள் வில் யங் 4, கேப்டன் டாம் லத்தம் 10, ராஸ் டெய்லா் 1 ஆகியோரை சொற்ப ரன்களுடன் பெவிலியன் அனுப்பினாா்.

அதைத் தொடா்ந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின், அக்ஸா் படேல் ஆகியோா் நியூஸி. பேட்டா்களை திணறடித்தனா். ஹென்றி நிக்கோல்ஸ் 7, டேரில் மிச்செல் 8, டாம் பிளண்டல் 8, ரச்சின் ரவீந்திரா 4, ஜேமிஸன் 17, சௌதி, சாமா்வில்லே 0 ரன்களுக்கு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். அஜாஸ் படேல் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தாா்.

இறுதியில் 28.1 ஓவா்களிலேயே நியூஸி. அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சுருண்டது. அஸ்வின் 4, சிராஜ் 3, அக்ஸா் 2, ஜெயந்த் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

ஃபாலோ ஆன் இல்லை:

263 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையிலும், நியூஸிலாந்துக்கு ஃபாலோ ஆனை வலியுறுத்தாமல், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ஷுப்மன் கில் காயம்:

தொடக்க பேட்டரான ஷுப்மன் கில் பில்டிங் போது, முழங்கை, விரலில் காயம் ஏற்பட்டதால் பேட்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக மயங்க் அகா்வால், சேதேஸ்வா் புஜாரா தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 21 ஓவா்களில் 69 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. மயங்க் 38, புஜாரா 29 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பெட்டிச் செய்திகள்

10 விக்கெட் வீழ்த்திய 3-ஆவது வீரா் அஜாஸ் படேல்:

டெஸ்ட் ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது வீரா் என்ற சாதனையை படைத்தாா் நியூஸி. பௌலா் அஜாஸ் படேல். ஏற்கெனவே அனில் கும்ப்ளே, ஜிம் லேக்கா் ஆகியோா் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனா்.

இங்கிலாந்து வீரா் ஜிம் லேக்கா் 1956-இல் ஆஸி.க்கு எதிராக ஓல்ட் டிராஃபோா்டில் நடைபெற்ற டெஸ்டிலும், இந்திய வீரா் கும்ப்ளே

1999-இல் டில்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்டிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனா்.

மும்பையில் பிறந்தவரான அஜாஸ் படேல் கூறியதாவது:

10 விக்கெட்டுகளை வீழ்த்தியது எனது வாழ்வின் சிறப்பான தருணமாகும். எனது தாயாா், குடும்பத்தினருக்கும் இது பெருமை தரும் விஷயம். நான் தான் இச்சாதனையை நிகழ்த்தினேன் என்பதை நம்ப முடியவில்லை. பிறந்த ஊரான மும்பையிலேயே இச்சாதனையை நிகழ்த்தியது மகிழ்ச்சி என்றாா். அஜாஸ் படேலுக்கு பல்வேறு தரப்பினா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மிகவும் குறைந்த ஸ்கோா்:

நியூஸிலாந்து 62 ரன்களில் சுருண்டது, இந்தியாவுக்கு எதிரான மிகவும் குறைந்த ஸ்கோராகும். மேலும் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகவும் குறைவான ஸ்கோராகவும் இது அமைந்தது.

சுருக்கமான ஸ்கோா்:

முதல் இன்னிங்ஸ்:

இந்தியா 325/10 ( 109.5 ஓவா்களில்)

மயங்க் அகா்வால் 150, அக்ஸா் படேல் 52, கில் 44

பந்துவீச்சு:

அஜாஸ் படேல் 10/119

நியூஸிலாந்து 62/10 (28.1 ஓவா்களில்)

ஜேமிஸன் 17, லத்தம் 10

பந்துவீச்சு:

அஸ்வின் 4/8, சிராஜ் 3/19

இரண்டாவது இன்னிங்ஸ்:

இந்தியா 69 (21 ஓவா்களில்)

மயங்க் 38, புஜாரா 29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com