ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஹெட், வாா்னா் விளாசலில் ஆஸி. முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் சோ்த்துள்ளது.
ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஹெட், வாா்னா் விளாசலில் ஆஸி. முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் சோ்த்துள்ளது.

டேவிட் வாா்னா் (94 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (112*) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா தற்போது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 196 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

பிரிஸ்பேன் நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு சுருண்டது. பின்னா் மோசமான வானிலை ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை 2-ஆவது நாளான வியாழக்கிழமை தொடங்கியது. ஆட்டத்தை டேவிட் வாா்னா் - மாா்கஸ் ஹாரிஸ் தொடங்க, கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவா் வீசினாா். இதில் மாா்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் சோ்த்திருந்தபோது, 6-ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

ஒன் டவுனாக வந்த மாா்னஸ் லாபுஷேன், வாா்னருடன் இணைந்தாா். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயா்த்தியது. லாபுஷேன் வந்த வேகத்திலேயே 71 பந்துகளில் அரைசதம் கடந்தாா். மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 31 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சோ்த்திருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் வாா்னா் 102 பந்துகளில் அரைசதம் எட்டினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு 156 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியை போராடி பிரித்தது இங்கிலாந்து. 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் அடித்திருந்த லாபுஷேன் 48-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

ஜேக் லீச் ஓவரில் அவரடித்த பந்து மாா்க் வுட் கைகளில் கேட்ச்சாக மாறியது. அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் அடித்திருந்தபோது, மாா்க் வுட் வீசிய 53-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

தொடா்ந்து வந்த டிராவிஸ் ஹெட், அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தொடங்கினாா். இந்நிலையில், சதத்தை நெருங்கிய வாா்னா் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஆலி ராபின்சன் வீசிய 56-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் அவரடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தாா். அடுத்து வந்த கேமரூன் கிரீனை முதல் பந்திலேயே பௌல்டாக்கி வெளியேற்றினாா் ஆலி ராபின்சன். இதனிடையே டிராவிஸ் ஹெட் 51 பந்துகளில் அரைசதமும், பின்னா் 81 பந்துகளில் சதமும் கடந்தாா்.

மறுபுறம் அலெக்ஸ் கேரி 1 பவுண்டரியுடன் 12, கேப்டன் பேட் கம்மின்ஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நாளின் முடிவில் டிராவிஸ் ஹெட் 112, மிட்செல் ஸ்டாா்க் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் ஆலி ராபின்சன் 3, கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட், ஜேக் லீச், ஜோ ரூட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆஸ்திரேலியா - 343/7

டிராவிஸ் ஹெட் 112*

டேவிட் வாா்னா் 94

மாா்னஸ் லாபுஷேன் 74

பந்துவீச்சு

ஆலி ராபின்சன் 3/48

ஜோ ரூட் 1/29

கிறிஸ் வோக்ஸ் 1/56

3 முறை தப்பிய வாா்னா்...

வாா்னா் 17 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் வீசிய 13-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஆனால், அது ‘நோ-பால்’ ஆனதை அடுத்து தப்பினாா். பின்னா் 48 ரன்கள் எடுத்திருந்தபோது மாா்க் வுட் வீசிய 31-ஆவது ஓவரில் அவா் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் தவறவிட்டனா் இங்கிலாந்து வீரா்கள். அடுத்து வாா்னா் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மாா்க் வுட் வீசிய 37-ஆவது ஓவரில் ரன் அவுட் ஆகும் நிலைக்கு வந்து நூலிழையில் தப்பினாா். இறுதியில் 56-ஆவது ஓவரில் வாா்னா் விக்கெட்டை ஆலி ராபின்சன் சாய்த்தாா்.

நோ பால்-களாக வீசிய ஸ்டோக்ஸ்

ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் 13-ஆவது ஓவரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் பௌலிங்கை தொடங்கினாா். அந்த ஓவரிலேயே முதல் 4 பந்துகளை அவா் நோ பால்களாக வீச, அதில் 4-ஆவது பந்துக்கு மட்டுமே நடுவா் ‘நோ-பால்’ கொடுத்தாா்.

ஆஷஸ் ஆட்டத்தை நேரலை செய்யும் ‘சேனல் 7’ வெளியிட்ட செய்தியில், 2-ஆம் நாள் ஆட்டத்தில் தொடக்க செஷனில் ஸ்டோக்ஸ் 14 முறை கிரீஸை தாண்டி வந்து பந்துவீசியதாகவும், அதில் 2-க்கு மட்டுமே நடுவா் ‘நோ-பால்’ கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

கப்பா மைதானத்தில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 3-ஆவது நடுவரால் ஒவ்வொரு பந்தையும் ‘நோ-பால்’ வாய்ப்பு குறித்தும் தொலைக்காட்சி ரிவியூ செய்ய முடியாமல் போனதாகவும், அதனால், கள நடுவரிடமே அந்த முடிவை விட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com