ஆஷஸ்: முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி
By DIN | Published On : 18th December 2021 03:53 PM | Last Updated : 18th December 2021 03:53 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது. எனினும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆஸி. அணி முடிவெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது.
2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.
2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், அடிலெய்ட் டெஸ்டிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். மைக்கேல் நசீர் ஆஸி. அணியில் இடம்பிடித்தார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி, 150.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 103, வார்னர் 95, ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84.1 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. டேவிட் மலான் 80, கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனாலும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆஸி. அணி முடிவெடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 237 ரன்கள் பின்தங்கியுள்ளது.