ஜெகதீசன், ஷாருக் கான் அபார பேட்டிங்: கர்நாடகத்தை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி
By DIN | Published On : 21st December 2021 05:24 PM | Last Updated : 21st December 2021 05:24 PM | அ+அ அ- |

ஜெகதீசன் (கோப்புப் படம்)
கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதிச் சுற்றில் தமிழக அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியின் காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர் பாபா அபரஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த என். ஜெகதீசன் - சாய் கிஷோர் ஆகியோர் அற்புதமான கூட்டணி அமைத்தார்கள். சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் என். ஜெகதீசன் 101 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 44, இந்திரஜித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
கடைசி 10 ஓவர்களில் ஷாருக்கானின் அதிரடி வேட்டை நடைபெற்றது. 7-வது வீரராகக் களமிறங்கிய ஷாருக் கான் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கடைசியில் ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். தமிழக இன்னிங்ஸின் கடைசிப் பகுதியில் ஒற்றை ஆளாக கர்நாடக அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்.
தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்தது. கர்நாடகத்தின் பிரவீன் டுபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடினமான இலக்கை எதிர்கொண்ட கர்நாடக அணி ஆரம்பத்திலேயே நெருக்கடியை எதிர்கொண்டது. படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார். ரோகன் கடம் - கே.வி. சித்தார்த் ஆகிய இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். ஆனால் பெரிய இலக்கை விரட்ட வேண்டிய நெருக்கடி இருந்ததால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது கர்நாடக அணி. எஸ். ஷரத் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். 39 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கர்நாடக அணி. சிலம்பரசன் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
காலிறுதியில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.