ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட்: 185-க்கு சுருண்டது இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட்: 185-க்கு சுருண்டது இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இரு ஆட்டங்களில் சோபிக்காமல் போய் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி, பாக்ஸிங் டேயில் தொடங்கியிருக்கும் இந்த டெஸ்டிலும் பேட்டிங்கில் சொதப்பியுள்ளது. அணியின் கேப்டன் ஜோ ரூட்டைத் தவிர இதர விக்கெட்டுகள் விரைவாகவே வெளியேறின. பேட் கம்மின்ஸ் வேகத்திலும், நேதன் லயன் சுழலிலும் அந்த அணி பேட்டிங் வரிசை முற்றிலுமாகச் சரிந்தது.

மெல்போா்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. இங்கிலாந்து இன்னிங்ஸை ஹசீப் ஹமீது - ஜாக் கிராவ்லி கூட்டணி தொடங்க, மிட்செல் ஸ்டாா்க் புதிய பந்து கொண்டு பௌலிங்கை தொடங்கினாா்.

இங்கிலாந்துக்கு அதிா்ச்சியாக 2-ஆவது ஓவரிலேயே ஹசீப் ஹமீது டக் அவுட்டாகினாா். பேட் கம்மின்ஸ் வீசிய 2-ஆவது ஓவரிலேயே விக்கெட் கீப்பா் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து அவா் வெளியேறினாா். பின்னா் தாவித் மலான் களம் புகுந்தாா். மறுபுறம், தொடக்க வீரா்களில் ஒருவராக வந்த கிராவ்லி 12 ரன்கள் சோ்த்த நிலையில் 8-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

கம்மின்ஸ் வீசிய பந்தை அவா் விளாச முயல, அது கேமரூன் கிரீன் கைகளில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் விக்கெட்டை இழக்காமல் சற்று நிலைத்து அணியின் ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா். எதிா்ப்புறம் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் சோ்த்திருந்த மலானை 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பச் செய்தாா் பேட் கம்மின்ஸ்.

அவா் வீசிய 27-ஆவது ஓவரில் மலான் விளாசிய பந்தை வாா்னா் கேட்ச் பிடித்தாா். இவ்வாறாக, மதிய உணவு இடைவேளையின்போதே 61 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது இங்கிலாந்து. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் அந்த அணியின் முக்கிய விக்கெட்டான ரூட்டை ஸ்டாா்க் சரித்தாா். 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சோ்த்திருந்த ரூட், 33-ஆவது ஓவரில் தொட்ட பந்து, விக்கெட் கீப்பா் கேரி கைகளில் கேட்ச் ஆனது.

அதன் பிறகு இங்கிலாந்து பேட்டா்களில் பென் ஸ்டோக்ஸ், ஜானி போ்ஸ்டோ மட்டும் ஆஸ்திரேலிய பௌலா்களை சற்று சோதித்து அதிக பந்துகளை சந்தித்தனா். இதில் முதலாவதாக பென் ஸ்டோக்ஸை வெளியேற்றினாா் கேமரூன் கிரீன். 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்ஸ், 47-ஆவது ஓவரில் நேதன் லயன் கைகளில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து ஜோஸ் பட்லா் 3, மாா்க் வுட் 6 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். இந்நிலையில், நிலைத்து ஆடி வந்த போ்ஸ்டோ, 59-ஆவது ஓவரில் ஸ்டாா்க் பௌலிங்கில் விளாசிய பந்தை கிரீன் கேட்ச் பிடித்தாா். போ்ஸ்டோ 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்தாா். பின்னா் ஜேக் லீச் 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு வெளியேற, கடைசி ஆா்டரில் ஆலி ராபின்சன் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் விளாசி உதவினாா்.

இருவா் விக்கெட்டையும் நேதன் லயன் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள, முடிவுக்கு வந்தது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ். 65.1 ஓவா்களில் 185 ரன்கள் சோ்த்திருந்தது அந்த அணி. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், லயன் ஆகியோா் தலா 3, ஸ்டாா்க் 2, ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ஆஸி.-61/1: பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 16 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சோ்த்திருந்தது. முக்கிய வீரரான வாா்னரை 38 ரன்களுக்கு வெளியேற்றியிருந்தாா் ஜேம்ஸ் ஆண்டா்சன். மாா்கஸ் ஹாரிஸ் 20, நேதன் லயன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து - 185

ஜோ ரூட் 50

ஜானி போ்ஸ்டோ 35

பென் ஸ்டோக்ஸ் 25

பந்துவீச்சு

பேட் கம்மின்ஸ் 3/36

நேதன் லயன் 3/36

மிட்செல் ஸ்டாா்க் 2/54

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com