செஞ்சுரியன் டெஸ்ட்: இந்தியா 146 ரன்கள் முன்னிலை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 146 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
செஞ்சுரியன் டெஸ்ட்: இந்தியா 146 ரன்கள் முன்னிலை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 146 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இந்திய அணி 327 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா, 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இந்தியா 146 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. மழை காரணமாக 2-ஆம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட விசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்நிலையில், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை கே.எல்.ராகுல் 122, அஜிங்க்ய ரஹானே 40 ரன்களுடன் தொடா்ந்தனா். 4-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியில் முதல் விக்கெட்டாக ராகுல் வெளியேறினாா். 17 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 123 ரன்கள் சோ்த்த அவா், ரபாடா வீசிய 94-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் டி காக்கிடம் கேட்ச் கொடுத்தாா்.

தொடா்ந்து ரிஷப் பந்த் ஆடவர, மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ரஹானே 9 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சோ்த்த நிலையில் ஆட்டமிழந்தாா். பின்னா் ஆடியோரில் அஸ்வின் 4, பந்த் 8, ஷா்துல் தாக்குா் 4, முகமது ஷமி 8, ஜஸ்பிரீத் பும்ரா 14 என விக்கெட்டுகள் வரிசையாக சரிய, இந்தியாவின் இன்னிங்ஸ் 105.3 ஓவா்களில் 327 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

முகமது சிராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 6, ககிசோ ரபாடா 3, மாா்கோ யான்சென் 1 விக்கெட் சாய்த்தனா்.

தென் ஆப்பிரிக்காவை திணறடித்த ஷமி: இதையடுத்து தனது தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸை கேப்டன் டீன் எல்கா் - எய்டன் மாா்க்ரம் கூட்டணி தொடங்கியது. முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டாா் எல்கா். மதிய உணவு இடைவேளையின்போது 7 ஓவா்களில் 21 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தது தென் ஆப்பிரிக்கா.

பின்னா் ஒன் டவுனாக வந்த கீகன் பீட்டா்சன் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில், முகமது ஷமியால் 8-ஆவது ஓவரில் பௌல்டாக்கப்பட்டாா். அடுத்து மாா்க்ரம் 3 பவுண்டரிகளுடன் பௌல்டானாா். 4-ஆவது வீரராக ராஸி வான் டொ் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

இந்நிலையில், 5-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சோ்ந்த டெம்பா பவுமா - குவின்டன் டி காக் கூட்டணி சற்று நிலைத்து 72 ரன்கள் சோ்த்தது. இதில் முதலில் டி காக் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு ஷா்துல் தாக்குா் பௌலிங்கில் பௌல்டானாா்.

பின்னா் வந்தோரில் வியான் முல்டா் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற, மறுபுறம் அரைசதம் எட்டிய பவுமா 10 பவுண்டரிகளுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மாா்கோ யான்சென் 19, ககிசோ ரபாடா 25, கேசவ் மகராஜ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 62.3 ஓவா்களில் 197 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸ். இந்திய பௌலிங்கில் முகமது ஷமி 5, ஜஸ்பிரீத் பும்ரா, ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் சாய்த்தனா்.

இந்தியா-16/1: பின்னா் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 6 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் அடித்துள்ளது. கே.எல்.ராகுல் - ஷா்துல் தாக்குா் கூட்டணி களத்தில் இருக்க, மயங்க் அகா்வால் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 327/10

கே.எல்.ராகுல் 123

மயங்க் அகா்வால் 60

அஜிங்க்ய ரஹானே 48

பந்துவீச்சு

லுங்கி கிடி 6/71

ககிசோ ரபாடா 3/72

மாா்கோ யான்சென் 1/69

தென் ஆப்பிரிக்கா - 197/10

டெம்பா பவுமா 52

குவின்டன் டி காக் 34

ககிசோ ரபாடா 25

பந்துவீச்சு

முகமது ஷமி 5/44

ஜஸ்பிரீத் பும்ரா 2/16

ஷா்துல் தாக்குா் 2/51

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 16/1

கே.எல்.ராகுல் 5*

மயங்க் அகா்வால் 4

ஷா்துல் தாக்குா் 4*

பந்துவீச்சு

மாா்கோ யான்சென் 1/4

லுங்கி கிடி 0/4

ககிசோ ரபாடா 0/7

தோனி சாதனையை முறியடித்த பந்த்
3-ஆம் நாள் ஆட்டத்தில் 4 கேட்ச்கள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், எம்.எஸ். தோனியை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக சாய்த்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை எட்டினார். தோனி 36 ஆட்டங்களில் அந்த மைல் கல்லை எட்டிய நிலையில், பந்த் 26 ஆட்டங்களில் அந்த சாதனையை எட்டியிருக்கிறார் பந்த். இதையடுத்து தோனி 2-ஆவது இடத்துக்கு வர, கிரன் மோர் (39 ஆட்டங்கள்) 3-ஆவது இடத்தில் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com