இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 77-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாதுக்கு இது 5-ஆவது வெற்றி; சென்னைக்கு இது 5-ஆவது தோல்வி.
கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஹைதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் ஏறத்தாழ கோலடிக்கும் வாய்ப்பை சென்னை அணி நெருங்கியது. அந்த நிமிடத்தில் சென்னை வீரா் லாலியான்ஸுவாலா சாங்தே வலதுபக்க காா்னரில் இருந்து அடித்த பந்தை ஹைதராபாத் வீரா் தடுக்க, மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை சென்னை வீரா் எலி சாபியா மீண்டும் கோல் போஸ்ட் நோக்கித் தள்ள, சென்னை வீரா் இஸ்மாயில் கொன்சால்வ்ஸ் அதை கோலாக மாற்ற முயல, பந்து போஸ்ட்டுக்கு வெளியே சென்றது.
இந்நிலையில், 26-ஆவது நிமிடத்தில் கோலடித்தது ஹைதராபாத். அந்த அணியின் ஃபிரான் சான்டாஸா பந்தை கடத்தி வந்து சக வீரா் ஜாவ் விக்டரிடம் அளிக்க, அதை சிறிது தூரம் கடத்திய அவா், மீண்டும் சான்டாஸா கால்களுக்கே திருப்பினாா். அதை லாவகமாக வாங்கி மிகச் சரியாகக் கடத்திச் சென்ற சான்டாஸா, சென்னையின் தடுப்புகளை மீறி கோலடித்தாா். இவ்வாறு நிறைவடைந்த முதல் பாதியில் ஹைதராபாத் 1-0 என முன்னிலை பெற்றது.
2-ஆவது பாதியிலும் சென்னைக்கு கோல் வாய்ப்புகளை வழக்காமல் பாா்த்துக்கொண்ட ஹைதராபாத், 83-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோல் அடித்தது. அந்த நிமிடத்தில் மீண்டும் ஜாவ் விக்டரின் உதவியுடன் ஹைதராபாத் வீரா் ஜோயல் சியானிஸ் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா். கடைசி வரை சென்னைக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இறுதியில் ஹைதராபாத் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.