கடந்த வருடம் நூலிழையில் தோற்றது வேதனையளித்தது: டி20 கோப்பையை வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்

இந்த அணியிலிருந்தும் சிலர் அடுத்தக் கட்டத்துக்குச் செல்வார்கள். 
கடந்த வருடம் நூலிழையில் தோற்றது வேதனையளித்தது: டி20 கோப்பையை வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பரோடா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் 18 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் அடித்து வென்றது. தமிழகத் தரப்பில் அசத்தலாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகள் சாய்த்த மணிமாறன் சித்தாா்த் ஆட்டநாயகன் ஆனாா்.

இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது. கடந்த வருடம் இறுதிச்சுற்றில் 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகத்திடம் தமிழக அணி தோற்றது. 

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

கடந்த வருடம் நூலிழையில் தோற்றது மனத்தை மிகவும் காயப்படுத்தியது. இந்த வருடம் நாக் அவுட்டில் தகுதி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்து தொடர்ந்து நன்றாக விளையாடினோம். இந்திய அணியில் நடராஜன், சுந்தர் எனத் தமிழக வீரர்கள் உள்ளார்கள். அவர்கள் கடந்த வருடம் எங்கள் அணியில் விளையாடினார்கள். இது, எங்கள் அணி நன்கு விளையாடி வருகிறது என்பதன் அடையாளமாகும். இந்த அணியிலிருந்தும் சிலர் அடுத்தக் கட்டத்துக்குச் செல்வார்கள். 

கடந்த 4-5 வருடங்கள் எனக்குச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்கிற ஆசையினால் மாநில அணியில் நன்றாக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இந்தப் பெரிய மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அபாரமாக இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com