
24 வயது சாய் கிஷோர், சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். இதனால் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவியுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பரோடா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் 18 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் அடித்து வென்றது. தமிழகத் தரப்பில் அசத்தலாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகள் சாய்த்த மணிமாறன் சித்தாா்த் ஆட்டநாயகன் ஆனாா்.
இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், இப்போட்டியில் மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியுள்ளார். விளையாடிய எட்டு ஆட்டங்களிலும் அவருடைய பந்துவீச்சு தமிழக அணிக்குப் பெரிதும் உதவியுள்ளது. முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இந்த வருடப் போட்டியில் 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள்.
3-0-14-1
4-0-17-2
4-0-12-1
1-0-10-0
4-0-28-1
4-0-27-1 காலிறுதி
4-0-16-2 அரையிறுதி
4-1-11-0 இறுதிச்சுற்று
2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியில் சாய் கிஷோர் தான் அதிக விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 12 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள். எகானமி - 4.63. எனினும் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சாய் கிஷோருக்கு ஒரு வாய்ப்பையும் தோனி வழங்கவில்லை. இத்தனைக்கும் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசியும் ஒரு வாய்ப்பும் சாய் கிஷோருக்குக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து இரு வருடங்களாகத் தனது திறமையை நிரூபித்து வரும் சாய் கிஷோரை இனிமேலும் சிஎஸ்கே அணி வீணடிக்கக் கூடாது, தொடர்ந்து பல வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி சாய் கிஷோருக்கு மகத்தானதாக அமையட்டும்.