ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியாவின் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 1-2 எனத் தோற்றது ஆஸ்திரேலிய அணி. அடுத்ததாக ஒரே சமயத்தில் நியூசிலாந்துக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்ய இருந்தது. நியுசிலாந்தில் 5 டி20 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருந்தது. இதற்கான டெஸ்ட் மற்றும் டி20 அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவின் 2-ம் அலை உருவாகி, உருமாற்றம் பெற்ற கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்வது வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கும். 

ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளை எடுத்து வருவதை கவனத்தில் கொள்கிறோம். இந்தத் தொடரை நடத்த கூடுதல் செலவு செய்யவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தயாராக உள்ளது. 

எனினும் எங்கள் வீரர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதற்கு நாங்கள் சம்மதிக்க முயன்றாலும் சூழல் ஆபத்தானதாக உள்ளது. எனவே தென் ஆப்பிரிக்காவுடான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. மற்றொரு தேதியில் இந்தத் தொடர் நடைபெறும். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணியால் தகுதி பெற முடியும். இந்த நிலையில் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவது கடினமாகிவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com