தமிழக அணிக்காக விஜய் ஹசாரே போட்டியில் விளையாடுவேனா?: நடராஜன் பதில்

கடந்த 6 மாதங்களாக என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவில்லை...
தமிழக அணிக்காக விஜய் ஹசாரே போட்டியில் விளையாடுவேனா?: நடராஜன் பதில்

விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணியில் இடம்பெறுவது தொடர்பாக பிசிசிஐ தான் முடிவெடுக்கும் என வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் கடந்த வாரம் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்ற நடராஜன், தேசியக் கொடிக்கு முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

இந்நிலையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நடராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிசிசிஐ அனுமதி அளித்தால் (தமிழக அணிக்காக விஜய் ஹசாரே) ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன். சையத் முஷ்டாக் அலி போட்டிக்காக நான் விளையாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியது. 

சென்னை டெஸ்டுகளில் இந்திய அணியில் நான் இடம்பெறவில்லை. எனக்கு ஒரு இடைவெளி தேவை என்பதால் இதைப் புரிந்துகொள்கிறேன். கடந்த 6 மாதங்களாக என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவில்லை, என் குழந்தையைப் பார்க்கவில்லை என்பதால் இதில் எனக்குச் சம்மதமே.

அடுத்த மூன்று வாரங்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிகளை நான் மேற்கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை சொல்லப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து எனது பயிற்சியைத் தொடங்குவேன். உடற்தகுதியில் என் கவனம் தற்போது உள்ளது. மூன்று வகைப் போட்டிகளிலும் நான் விளையாட வேண்டும் என்றால் உடற்தகுதியில் நான் முழுமையடைய வேண்டும் என்றார்.

கடந்த சனிக்கிழமை பழனிக்கு வந்தாா் நடராஜன். மலையடிவாரக் கோயிலில் மொட்டையடித்து நோ்த்திக்கடன் செலுத்திய அவா், பின்னா் மலைக்கோயிலுக்கு ரோப்காா் மூலம் சென்றாா். அங்கு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த பின்னா் அவா் ரோப்காா் மூலமாகவே அடிவாரம் வந்தாா். நடராஜனைப் பாா்த்து ரசிகா்கள் ஏராளமானோா் அங்கு திரண்டு சுய புகைப்படம் மற்றும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com