227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில், 420 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்தியா, 192 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் கோலி மட்டும் 70 ரன்கள் விளாச, இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகள் சரித்தாா். அணியின் மூத்த பௌலா் ஜேம்ஸ் ஆண்டா்சன் ‘ரிவா்ஸ் ஸ்விங்’ வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகன் ஆனாா்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 190.1 ஓவா்களில் 578 ரன்கள் விளாசி முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. அபாரமாக ஆடிய ஜோ ரூட் 218 ரன்கள் குவிக்க, இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் சரித்தனா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 95.5 ஓவா்களில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தா் 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இவ்வாறாக முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 2-ஆவது இன்னிங்ஸில் 46.3 ஓவா்களில் 178 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட் மட்டும் 40 ரன்கள் அடித்திருக்க, இந்திய தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா்.

தொடா்ந்து 420 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 4-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை கில், புஜாரா தொடா்ந்தனா். இதில் புஜாரா பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து கேப்டன் கோலி களம் காண, மறுமுனையில் ஷுப்மன் கில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 50 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் வந்தவா்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கோலி மட்டும் 9 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் சோ்த்தாா். இதர வீரா்களில் ரிஷப் பந்த் 11, அஸ்வின் 9, பும்ரா 4 ரன்கள் அடிக்க, ரஹானே, சுந்தா், நதீம் டக் அவுட்டாகினா். இவ்வாறாக 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. இஷாந்த் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4, ஆண்டா்சன் 3, ஆா்ச்சா், பெஸ், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

முதல் இன்னிங்ஸிலேயே ஆட்டம் மாறிவிட்டது
முதல் இன்னிங்ஸில் எங்களது பேட்டிங் நிறைவடைந்தபோதே ஆட்டம் இங்கிலாந்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. பேட்டிங்கில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. அடுத்த ஆட்டங்களில் நிலையான பார்ட்னர்ஷிப் கொண்டு விளையாட முயற்சிப்போம். 
2 ஆஃப் ஸ்பின்னர்களைக் கொண்டு விளையாடும்போது குல்தீப் யாதவையும் தேர்வு செய்தால், பெüலிங்கில் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. பெüலிங்கில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ஷாபாஸ் நதீமை தேர்வு செய்தோம். அதை சரியானதாகவே நினைக்கிறோம். இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியதே உண்மை. பெளலிங் மூலம் அவர்களுக்கு இன்னும் நெருக்கடி ஏற்படுத்தத் தவறிவிட்டோம். அதிக ரன்களையும் வழங்கிவிட்டோம். அடுத்த 3 ஆட்டங்களிலும் நிச்சயம் சவால் அளிக்கும் வகையில் விளையாடுவோம் 
- விராட் கோலி 
(இந்திய கேப்டன்)

4-ஆவது தோல்வி
இந்த டெஸ்ட் தோல்வியானது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து கண்டுள்ள 4-ஆவது டெஸ்ட் தோல்வியாகும். கோலியின் கேப்டன்ஷிப்பில் அடுத்தடுத்து இத்தனை டெஸ்ட் தோல்விகளை இந்தியா கண்டது இதுவே முதல் முறை. 
இந்த 4 டெஸ்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து 7 டெஸ்டுகளில் விராட் கோலி தலைமையிலான இந்தியா 7 வெற்றிகளை பதிவு செய்தது. வேறு எந்தவொரு கேப்டன் தலைமையிலும் இந்தியா தொடர்ந்து இத்தனை வெற்றிகளை பதிவு செய்ததில்லை.

வான் சாதனை சமன்
இந்தியாவுக்கு எதிரான இந்த வெற்றி, ஜோ ரூட் கேப்டனாக இருக்கும்போது இங்கிலாந்து பதிவு செய்துள்ள 26-ஆவது வெற்றியாகும். 
இங்கிலாந்து அணி ஒரே கேப்டன் தலைமையில் இத்தனை டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்தது இது 2-ஆவது முறை. இதற்கு முன் மைக்கேல் வான் தலைமையில் இங்கிலாந்து இதேபோல் 26 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தற்போது அந்த மைல்கல்லை ஜோ ரூட்டும் எட்டியுள்ளார். 
ஜோ ரூட், மைக்கேல் வான் வரிசையில் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், அலாஸ்டர் குக், பீட்டர் மே ஆகியோர் தலைமையில் இங்கிலாந்து அணி முறையே 24, 24, 20 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இலங்கை பயணம் உதவியாக இருந்தது
இந்த வெற்றியை எங்களுக்கான ஒரு அளவுகோலாக நிர்ணயித்துக்கொள்ள இயலும். இன்னும் சில இடங்களில் நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அருமையான வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி சொந்த மண்ணில் நிச்சயம் சவால் அளிக்கும் வகையில் விளையாடும் என எதிர்நோக்கியே வந்தோம். 
இந்தியாவுக்கு வரும் முன்பாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் டெஸ்ட் தொடர் விளையாடியது தற்போது உதவியாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் வலுவான ஸ்கோரை எட்டுவது, 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்ற எங்களது திட்டத்தை மிகச் சரியாகச் செயல்படுத்தினோம். எங்களது வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டோம். ஆண்டர்சன் உள்பட எங்களது வீரர்கள் முக்கியமான தருணங்களில் மிகச் சரியாகச் செயல்பட்டனர்.
ஜோ ரூட் (இங்கிலாந்து கேப்டன்)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 4-ஆவது இடத்தில் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இழந்து 4-ஆவது இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்கான நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 
அந்த அணி தற்போது 70.2 புள்ளிகள் சதவீதத்துடன் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1, 3-0, 4-0 என ஏதேனும் ஒரு கணக்கில் இங்கிலாந்து வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும். 
புள்ளிகள் பட்டியலில் 68.3 புள்ளிகள் சதவீதத்துடன் இருக்கும் இந்தியா, நடப்பு டெஸ்ட் தொடரை 2-1 அல்லது 3-1 என ஏதேனும் ஒரு கணக்கில் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. 
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சமன் ஆனாலோ அல்லது இங்கிலாந்து 1-0, 2-1, 2-0 என்ற கணக்குகளில் ஏதேனும் ஒரு வகையில் வென்றாலோ, ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெறும். அந்த இறுதி ஆட்டத்துக்கு நியூஸிலாந்து முதல் அணியாக ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com