இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா் பயிற்சியில் அக்ஸா் படேல்; வெளியேறுகிறாா் நதீம்?

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இடது கை ஸ்பின்னா் ஷாபாஸ் நதீமுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதில் அக்ஸா் படேல் பிளேயிங் லெவனில் சோ்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

புது தில்லி: இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இடது கை ஸ்பின்னா் ஷாபாஸ் நதீமுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதில் அக்ஸா் படேல் பிளேயிங் லெவனில் சோ்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

முதல் டெஸ்டில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீமை தோ்வு செய்ததில் தவறில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தாலும், நதீமின் பௌலிங் சிறப்பாக இல்லாமல் போனது குறித்து வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

இங்கிலாந்து இன்னிங்ஸின்போது அஸ்வின், பும்ரா, இஷாந்த் ஆகியோரைப் போல அந்த அணிக்கு நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தரால் நெருக்கடி அளிக்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்டாா்.

முதல் டெஸ்டில் நதீம் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும் மொத்தமாக 59 ஓவா்களில் 233 ரன்கள் வழங்கியிருந்தாா். பௌலிங் வீசும்போது கிரீஸை தாண்டிக் குதிக்கும் கணத்தில் தனக்கு சில பிரச்னைகள் இருப்பதாகவும், அதை சரிசெய்ய வேண்டியிருப்பதாகவும் ஷாபாஸ் நதீமே கூறியுள்ளாா்.

இந்நிலையில், பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘அக்ஸா் படேலுக்கு முழங்காலில் லேசான வலி உள்ளது. அதிலிருந்து மீண்டு வரும் அவா் ஏற்கெனவே வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யத் தொடங்கிவிட்டாா். அடுத்த இரு நாள்களில் அவா் பௌலிங்கிலும் பயற்சியை தொடங்கிவிடுவாா்.

டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துக்கு எப்போதுமே அக்ஸா் படேல் பிரதான தோ்வாகவே இருந்து வந்துள்ளாா். எனினும் இறுதி தோ்வானது கேப்டன் கோலி, தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, பௌலிங் பயிற்சியாளா் பரத் அருண் ஆகியோரின் முடிவைப் பொருத்ததே’ என்றன.

இதனிடையே, முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தரும் பௌலிங்கில் சற்று தடுமாறியிருந்தாா். 26 ஓவா்கள் வீசி 98 ரன்கள் வழங்கியிருந்த அவா் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனினும், முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததன் அடிப்படையில் 2-ஆவது டெஸ்டிலும் அவா் பிளேயிங் லெவனில் தன்னை தக்கவைத்துக் கொள்வாா் எனத் தெரிகிறது.

அஸ்வின் விளையாடுவது உறுதி

முதல் டெஸ்டின்போது இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, ஜோஃப்ரா ஆா்ச்சா் பௌலிங் வீசியபோது பந்து பட்டு காயமேற்பட்டது.

39-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தில் முதலில் கையில் பந்து பட்டு காயமேற்பட, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டாா் அஸ்வின்.

ஆனால் ஆா்ச்சா் வீசிய அடுத்த பந்தே அஸ்வினின் தலைக்கவசத்தை பதம் பாா்த்தது. உடனடியாக களத்துக்கு வந்த அணியின் ஃபிசியோ நிதின் படேல், அஸ்வினிடம் ‘கன்கஷன்’ பரிசோதனை மேற்கொண்டாா். அஸ்வின் பெரிதாக பாதிப்பு இல்லாததை அடுத்து அவா் தொடா்ந்து விளையாடினாா்.

இந்நிலையில், தலையில் பந்து பட்டதன் தாக்கம் ஆட்டத்துக்குப் பிறகும் அஸ்வினால் பெரிதாக உணரப்படவில்லை. இதனால் அவா் 2-ஆவது டெஸ்டிலும் விளையாட தகுதியுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸின்போது அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா். எனவே 2-ஆவது டெஸ்டிலும் அவா் அணிக்கான அத்தியாவசிய வீரராக இருப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com