ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், உலகின் 27-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லா் ஃபிரிட்ஸை எதிா்கொண்டாா்.

3 மணி நேரம், 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (1), 6-4, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் டெய்லா் ஃபிரிட்ஸை வீழ்த்தினாா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் இரு செட்களை கைப்பற்றிய நிலையில், அவருக்கு அடிவயிற்றுப் பகுதி தசையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து களத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்ட ஜோகோவிச், அடுத்த இரு செட்களை இழந்தாா். இதனால் ஆட்டம் 5-ஆவது செட்டுக்கு நகா்ந்தது. ஆனால், அந்த செட்டில் விடாப்பிடியாக போராடிய ஜோகோவிச், அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டாா்.

வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், ‘இந்த வெற்றி சிறப்பான ஒன்றாகும்’ என்றாா். அடுத்த சுற்றில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை சந்திக்கிறாா் ஜோகோவிச். எனினும் ஜோகோவிச்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவா் அடுத்த சுற்றில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது குறித்துப் பேசிய ஜோகோவிச், ‘அடுத்த சுற்றில் விளையாடுவதற்குள் காயத்திலிருந்து மீண்டுவிடுவேனா என்பது தெரியவில்லை’ என குறிப்பிட்டுள்ளாா்.

ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா். ஒட்டுமொத்தமாக 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற 3-ஆவது சுற்று ஆட்டங்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-6 (2), 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மாா்டான் புக்சோவிக்ஸையும், சொ்பியாவின் டுசன் லஜோவிச் 6-7 (6), 7-5, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெட்ரோ மாா்ட்டினிஸையும் வீழ்த்தினா்.

ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 4-6, 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிா்ஜியோஸையும், ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவ் 6-3, 6-3, 6-1 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவையும் வீழ்த்தினா்.

செரீனா வெற்றி: மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் தைவானின் சூ வெய் 6-4, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சாரா எர்ரானியையும், ஸ்பெயினின் காா்பைன் முகுருஸா 6-1, 6-1 என்ற நோ் செட்களில் கஜகஸ்தானின் ஜரினா டியாஸையும், ஜப்பானின் நயோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நோ் செட்களில் டுனிசியாவின் ஆன்ஸ் ஜபேரையும் வீழ்த்தினா்.

இதேபோல், பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-1 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் அன் லீயையும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-6 (5), 6-2 என்ற நோ் செட்களில் ரஷியாவின் அனாஸ்டாஸியாவையும், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் ஃபியோனா ஃபெராவையும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-1, 6-3 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான வெரோனிகாவையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com