முகக்கவசம் அணியவில்லையென்றாலும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்: சென்னை ரசிகர்களுக்கு அஸ்வின் பாராட்டு!

இந்த டெஸ்டை சென்னை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ரசிகர்கள் இல்லாததால் தான்...
முகக்கவசம் அணியவில்லையென்றாலும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்: சென்னை ரசிகர்களுக்கு அஸ்வின் பாராட்டு!

சென்னை ரசிகர்களால் தான் டெஸ்ட் தொடரைத் தற்போது 1-1 என சமன் செய்துள்ளோம் என்று 2-வது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற அஸ்வின் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். அக்‌ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆனார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் சதத்துடன் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியிருந்தது. 

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்கள்.

இந்த டெஸ்டில் ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய இருவரும் அற்புதமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்கள். கடினமான ஆடுகளத்தில் பல பேட்ஸ்மேன்கள் தடுமாறியபோதும் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்தார். இதனால் தான் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆட்ட நாயகன் விருது அவருக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் எடுத்த அஸ்வின், இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் அற்புதமாக விளையாடி சதமெடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதுக்கு அஸ்வின் தேர்வாகியுள்ளார். 

பரிசளிப்பு விழாவில் முன்னாள் வீரர் முரளி கார்த்திக்கிடம் அஸ்வின் தமிழில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னை சேப்பாக்கத்தில் நான் விளையாடுவேனா, நமக்கும் நாலு பேர் கை தட்டுவாங்களா, இந்த மைதானத்தில் விளையாட அனுமதிப்பாங்களா என  நினைத்திருக்கிறேன். இங்கு வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்து டெஸ்ட் ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். என் அப்பா எல்லா டெஸ்ட் ஆட்டங்களுக்கும் அழைத்து வருவார். சொல்வதற்கு எனக்கு வார்த்தையே இல்லை. இங்கு நான்கு டெஸ்டுகளில் விளையாடியுள்ளேன். இதுதான் எனக்கு சிறப்பான டெஸ்ட். கதாநாயகனுக்கான உணர்வு கிடைத்தது. கரோனா சமயத்தில் கிரிக்கெட்டே இல்லாதபோது நிறைய பேர் டெஸ்ட் பார்க்க வந்துள்ளார்கள். முக்கவசமே போடவில்லையென்றாலும் கூட கைத்தட்டி கலக்கி விட்டார்கள். இந்த டெஸ்டை சென்னை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ரசிகர்கள் இல்லாததால் தான் 0-1 என ஆனோம். ரசிகர்கள் வந்த பிறகு 1-1 ஆகிவிட்டோம். ஆமதாபாத்திலும் ரசிகர் கூட்டம் வரும் என்றார். 3-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் பிப்ரவரி 24 அன்று தொடங்குகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com