'விக்கெட் வீழ்த்த ஆடுகளம் மட்டும் போதாது': அஸ்வின் கருத்தில் உண்மை உண்டு (விடியோ இணைப்பு)

'விக்கெட் வீழ்த்த ஆடுகளம் மட்டும் போதாது': அஸ்வின் கருத்தில் உண்மை உண்டு (விடியோ இணைப்பு)


"முதல் ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆடுகளம் முற்றிலும் வேறானது. பந்துக்கு ஆடுகளம் அதிகளவில் உதவும்போது நிறைய விக்கெட்டுகள் விழுவதில்லை. ஆட்டத்தில் மூளையைப் பயன்படுத்தும்போதே விக்கெட்டுகள் விழுகின்றன."

இங்கிலாந்துடான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது இது.

2-வது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் நாளிலிருந்தே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து திரும்பத் தொடங்கியதால் ஆடுகளத்தின் மீது விமரிசனங்கள் எழத் தொடங்கின. இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் மோசமான ஆடுகளம் என விமரிசித்தார். பல்வேறு தளங்களில் இதே கருத்து வெளிப்பட்டது.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் ரோஹித் சர்மா 161 ரன்கள் குவித்தபோதும் சரி, இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 106 ரன்கள் குவித்தபோதும் சரி ஆடுகளம் மீதான விமரிசனத்தின் வீரியம் குறையவில்லை.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே உள்ளிட்டோர் மட்டுமே இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரோஹித் சர்மா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர் முதல் இன்னிங்ஸிலும் விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோர்  2-வது இன்னிங்ஸிலும் காண்பித்துள்ளனர் என ஆதரவுக் கரம் நீட்டினர்.

இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில்தான் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதனாலேயே எதையும் செய்யாமல் பந்துவீசினால் மட்டும் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று அர்த்தமாகிவிடாது என அஸ்வின் கூறியுள்ளார்.

முதலாவதாக ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் சதமடிக்க முடியாது. ஆனால், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சதமடிக்க முடியும் என்பதை தனது செயல் மூலம் விமரிசனங்களுக்குப் பதிலளித்துள்ளார் அஸ்வின்.

அடுத்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதாலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட முடியாது என்பதையும் இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்த்திய விதத்தின்மூலம் அஸ்வின் சான்றுகளை அடுக்கியுள்ளார்.

லாரன்ஸுக்கு வீசப்பட்ட வலையே இதற்கு சிறந்த உதாரணம்:

482 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி 3-ம் நாள் ஆட்டத்தின்போது களமிறங்கியது. முதல் விக்கெட்டாக டோம் சிப்லே ஆட்டமிழந்ததையடுத்து, மூன்றாவது வீரராக டேன் லாரன்ஸ் களமிறங்கினார். 3-ம் நாள் ஆட்டத்தில் கிரீஸை விட்டு இறங்கி வந்து தூக்கி அடித்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளிக்க முயற்சித்தார் லாரன்ஸ். அதில் வெற்றியும் கண்டார். குறிப்பாக அஸ்வின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும் பந்துகள் திரும்புவதற்கு முன்பு இறங்கி வந்து தூக்கி அடித்து நெருக்கடியளித்தார்.

இதன் காரணமாக 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், லாரன்ஸ் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்திருந்தார். 3-வது நாளில் லாரன்ஸ் ஆடிய விதத்தை இங்கிலாந்து சுழற்பந்துவீச்சு ஆலோசகர் ஜீதன் படேல்கூட செய்தியாளர்கள் சந்திப்பில் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே லாரன்ஸ் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தில் ஸ்டம்புகளுக்கு வலதுபுறத்திலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசிய அஸ்வின், இன்றைய ஆட்டத்தில் ஸடம்புகளுக்கு இடதுபுறத்திலிருந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினார். நேற்றைய ஆட்டம்போல் பந்து வரும் என்று எதிர்பார்த்த லாரன்ஸ், கால் திசையில் பந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. விளைவு பந்தைத் தவறவிட்ட அவர் ரிஷப் பந்தின் ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பந்துவீசுவதற்கு முன்பு ரிஷப் பந்தை அஸ்வின் தனது திட்டத்தினைக் கூறி எச்சரித்திருப்பார். 

இது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரின் மனநிலை மற்றும் திட்டத்துக்கு இடையிலான போட்டி. இந்தப் போட்டியில்தான் அஸ்வின் வெற்றி கண்டுள்ளார். இந்த திட்டத்துக்கும் வியூகத்தும் ஆடுகளம் தேவையில்லை, பேட்ஸ்மேனையும் பேட்ஸ்மேனின் மனநிலையைக் கணிப்பதுமே போதுமானது. லாரன்ஸ் கிரீஸைவிட்டு இறங்கிதான் விளையாடுவார் என்பதை இலங்கைத் தொடரில் அவர் விளையாடியதைப் பார்த்து புரிந்துகொண்டதாக ஆட்டத்தின் நடுவே அஸ்வின் ஒருமுறை கூறியது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இதனைத்தான் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு அஸ்வின் குறிப்பிட்டு பேசியிருக்கக்கூடும்.

முதல் இன்னிங்ஸிலும் இதேபோன்று உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தில் லாரன்ஸ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com