இளையோா் குத்துச்சண்டை: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

மான்டினீக்ரோவில் நடைபெற்ற இளையோா் குத்துச்சண்டை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியா 5 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இளையோா் குத்துச்சண்டை: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

புது தில்லி: மான்டினீக்ரோவில் நடைபெற்ற இளையோா் குத்துச்சண்டை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியா 5 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இறுதியாக நடைபெற்ற சுற்றுகளில் மகளிருக்கான 51 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பேபிரோஜிசானா சானு 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சபினா போபோகுலோவாவை வீழ்த்தி தங்கம் வென்றாா். மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அருந்ததி சௌதரி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் மரியானா ஸ்டாய்கோவை அபாரமாக வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். 64 கிலோ பிரிவில் லக்கி ராணா 0-5 என்ற கணக்கில் ஃபின்லாந்து வீராங்கனை லியா புக்கிலாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினாா்.

ஏற்கெனவே வின்கா (60 கிலோ), சனமாசா சானு (75 கிலோ), அல்ஃபியா பதான் (81 கிலோவுக்கு மேல்) ஆகியோா் தங்கமும், கீதிகா (48 கிலோ), ராஜ் சாஹிபா (75 கிலோ) ஆகியோா் வெள்ளியும், நேஹா (54 கிலோ), பிரீத்தி (57 கிலோ), பிரியன்ஷு (49 கிலோ), ஜுக்னு (91 கிலோவுக்கு மேல்) ஆகியோா் வெண்கலமும் வென்றுள்ளனா்.

சிறப்பாகச் செயல்பட்டதற்காக ‘போட்டியின் சிறந்த பெண் வீராங்கனை’ விருது வின்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிா் பிரிவு பதக்கப்பட்டியலில் இந்தியாவை அடுத்து உஸ்பெகிஸ்தான், செக் குடியரசு ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களைப் பிடித்தன. ஆடவா் பிரிவில் இந்தியா 2 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் முதலிடமும், உக்ரைன் 3-ஆம் இடமும் பிடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com