உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது ஏன்?

குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தபோது இந்த மைதானம் கட்டுவது குறித்து...
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது ஏன்?

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்குப் பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டதற்கான காரணத்தை உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கவுள்ளன. முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எனப் பெயர் பெற்றுள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன. இந்த மைதானத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்துள்ளார். தொடக்க விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சா் அமித் ஷா, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போன்றோர் கலந்துகொண்டார்கள். மேலும் புதிய விளையாட்டு வளாகத்துக்கு சர்தார் வல்லபாய் படேலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மோடி மைதானத்தின் தொடக்க விழாவில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது: இந்த மைதானத்துக்கு நமது பிரதமர் மோடியின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளோம். இது அவருடைய கனவு மைதானமாகும் என்றார்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தபோது இந்த மைதானம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்தார் என்றார்.  

தொடக்க விழா விடியோ

ஆமதாபாத்தில் சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானம், 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக அதை மாற்றுவதற்கு 2015-இல் முடிவு செய்யப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.

முதலில் 49,000 பேர் அமரும் வகையில் இருந்த மைதானம், மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 1.10 லட்சத்துக்கும் அதிகமானோர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ளது. இதில், தலா 25 பேர் வசதியாக அமரக் கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ் கேலரிகளும் அடங்கும். சுமார் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. உலகிலேயே வேறெந்த மைதானத்திலும் இல்லாத வகையில், வீரர்களுக்காக 4 ஓய்வறைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியே உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. பிரம்மாண்ட விளக்குக் கம்பங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி ஃப்ளட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு ஆட்டங்களின்போது தெளிவான காண்புநிலை இருக்கும் வகையிலும், மைதானத்தில் நிழல் விழாத வகையிலும் அவை பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com