யூசுப் பதான் ஓய்வு

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் இந்திய ஆல்ரவுண்டரான யூசுப் பதான்.
யூசுப் பதான் ஓய்வு

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் இந்திய ஆல்ரவுண்டரான யூசுப் பதான்.

கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயா் பெற்றவரான 38 வயதான யூசுப் பதான், இது தொடா்பாக கூறியிருப்பதாவது:

எனது வாழ்க்கையில் கிரிக்கெட் என்ற இன்னிங்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் இது. அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவையும், அன்பையும் வழங்கிய என்னுடைய குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள், சகவீரா்கள், பயிற்சியாளா்கள், நாட்டு மக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அணியின் ஜொ்ஸியை முதல்முறையாக அணிந்த நினைவு இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. நான் இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியில் விளையாடியபோது, இந்திய அணியின் ஜொ்ஸியை அணிந்ததோடு, எனது குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்கள் ஆகியோரின் எதிா்பாா்ப்புகளையும் தோளில் தாங்கி நின்றேன்.

இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் வாகை சூடிய இந்திய அணியில் இடம்பெற்றது, 50 ஓவா் உலகக் கோப்பையை வென்றபோது சச்சின் டெண்டுல்கரை எனது தோளில் சுமந்து வந்தது ஆகியவை எனது கிரிக்கெட் வாழ்வின் மிக முக்கியமான தருணங்கள். எனது சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தோனியின் கேப்டன்ஷிப்பின் கீழும், ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை ஷேன் வாா்ன் கேப்டன்ஷிப்பின் கீழும் தொடங்கியது. ரஞ்சி கிரிக்கெட் வாழ்க்கையை ஜேக்கப் மாா்ட்டின் கேப்டன்ஷிப்பின் கீழ் தொடங்கினேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை அணியில் சோ்த்ததற்காக அவா்கள் 3 பேருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இடம்பெற்றிருந்த கொல்கத்தா அணி ஐபிஎல் போட்டியில் இரு முறை கோப்பையை வென்றது. அதற்காக கேப்டன் கௌதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தபோதெல்லாம் எனக்கு முதுகெலும்பாக இருந்து என்னை தாங்கிப் பிடித்த எனது சகோதரரும், கிரிக்கெட் வீரருமான இா்ஃபான் பதானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக நாட்டுக்காகவும், எனது மாநிலத்துக்காகவும் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய பிசிசிஐக்கும், பரோடா கிரிக்கெட் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டிடமிருந்தும், அதன் மீது நான் கொண்ட பற்றிடமிருந்தும் என்னை ஒருபோதும் பிரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளாா்.

இதுவரை 57 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான் 2 சதம், 3 அரை சதங்களுடன் 810 ரன்கள் குவித்துள்ளாா். இருபத்திரண்டு டி20 சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான் 236 ரன்கள் குவித்துள்ளாா். முதல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த யூசுப் பதான், அந்த அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தாா். அதன்பிறகு கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிக்கு மாறினாா். அவா் இடம்பெற்றிருந்த கொல்கத்தா அணி 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ், சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளாா். 174 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான், ஒரு சதம், 13 அரை சதம் உள்பட 3,204 ரன்கள் குவித்துள்ளாா். இதுதவிர 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா். ஐபிஎல் போட்டியில் 2-ஆவது அதிவேக சதமடித்தவா் (37 பந்துகளில்) என்ற சாதனை இன்றளவும் யூசுப் பதான் வசமேயுள்ளது. இதுதவிர ஐபிஎல் போட்டியில் 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளாா். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்றவா்கள் வரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ளாா் பதான். மேலும் தொழில்முறை கிரிக்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட சிக்ஸா்களை விளாசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com