பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பா?: கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

பிசிசிஐயிடமிருந்து எங்களுக்கு முறைப்படி வேறு எந்தத் தகவலும் வரவில்லை...
பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பா?: கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

நான்காவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிப்பதாக வெளியான தகவல்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை காரணமாகக் கூறி 4-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணியினா் பிரிஸ்பேன் செல்ல மறுப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

3-ஆவது டெஸ்ட் நடைபெறும் சிட்னியின் கடற்கரைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், அந்நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லையை குயின்ஸ்லாந்து மாகாணம் மூடியுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் தான் 4-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளதால், வீரா்கள் பயணம் உள்ளிட்டவற்றுக்கு பிரச்னை உள்ளது. எனினும் அதுதொடா்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குயின்ஸ்லாந்து மாகாண அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு இரு அணிகளும் பயணிக்க அனுமதி பெறப்பட்ட பிறகு, குயின்ஸ்லாந்து மாகாணம் விதிக்கும் கரோனா தடுப்பு விதிமுறைகள் மிகக் கடுமையானதாக இருக்குமெனத் தெரிகிறது. விளையாடும் மற்றும் பயிற்சியில் ஈடுபடும் நேரங்கள் தவிர கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அறையை விட்டு வெளியேற முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இதற்கு இந்திய வீரர்களும் பிசிசிஐயும் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா வந்தவுடனேயே பல நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தற்போது மீண்டும் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்தப்படுவது இந்திய வீரா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது. அந்த அமைப்பின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது:

எங்களுடைய திட்டங்களுக்கு ஆதரவளிப்பதைத் தவிர பிசிசிஐயிடமிருந்து எங்களுக்கு முறைப்படி வேறு எந்தத் தகவலும் வரவில்லை. பிசிசிஐ அதிகாரிகளிடம் தினமும் பேசி வருகிறோம். கடந்த 24 மணி நேரத்தில், பிரிஸ்பேனில் உள்ள விதிமுறைகள் குறித்து பிசிசிஐயிடம் தெரிவித்துவிட்டோம். வீரர்கள் தங்கும் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்கிற விதிமுறை இருப்பதாகக் கூறுகிறார்கள். அது அப்படி அல்ல. டெஸ்ட் தொடங்கும் முன்பு காலை 8 அல்லது 9 மணிக்கு வீரர்கள் மைதானத்துக்கு வருவார்கள். மாலை 6 அல்லது 7 மணி வரை மைதானத்தில் இருப்பார்கள். பிறகு விடுதிக்குச் சென்று ஓய்வெடுப்பார்கள். அவர்களுக்குள் இணைந்து செல்லலாம். எல்லோரும் இதற்கு ஆதரவளிக்கிறார்கள். திட்டமிட்டபடி டெஸ்ட் ஆட்டத்தை நடத்த விரும்புகிறோம் என்றார்.

துணை கேப்டன் ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, பிருத்வி ஷா ஆகியோா் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக கூறப்படுவது குறித்து பிசிசிஐ-யுடன் இணைந்து விசாரித்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியினா் தனி விமானத்தில் இன்று சிட்னி செல்கின்றனா். இதில், கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாருக்கு உள்ளான 5 இந்திய வீரா்களும் இந்திய அணியுடன் இணைந்தே செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com