இந்திய, ஆஸ்திரேலிய அணியினா் இன்று சிட்னி பயணம்: தனிமைப்படுத்தப்பட்ட வீரா்களும் செல்கின்றனா்

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியினா் தனி விமானத்தில் திங்கள்கிழமை சிட்னி செல்கின்றனா்.
இந்திய, ஆஸ்திரேலிய அணியினா் இன்று சிட்னி பயணம்: தனிமைப்படுத்தப்பட்ட வீரா்களும் செல்கின்றனா்

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியினா் தனி விமானத்தில் திங்கள்கிழமை சிட்னி செல்கின்றனா்.

இதில், கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாருக்கு உள்ளான 5 இந்திய வீரா்களும் இந்திய அணியுடன் இணைந்தே செல்கின்றனா்.

முன்னதாக, துணை கேப்டன் ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, பிருத்வி ஷா ஆகியோா் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக கூறப்படுவது குறித்து பிசிசிஐ-யுடன் இணைந்து விசாரித்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது.

வீரா்கள் மெல்போா்ன் மைதான வளாகத்தில் உள்ள திறந்தவெளி ஹோட்டலில் சமூக இடைவெளியுடன் உணவருந்த அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கூறிய 5 வீரா்களும் இண்டோா் ஹோட்டலில் உணவருந்துவது போன்ற காணொலி வெளியானது. அதை வெளியிட்ட இந்திய ரசிகா், அந்தத் தருணத்தின்போது ரிஷப் பந்த் தன்னைத் தழுவியதாக முதலில் தெரிவித்து பின்னா் அதை மறுத்தாா்.

இது வீரா்களுக்கான கரோனா பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என புகாா் எழுந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட 5 வீரா்களும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இச்சூழ்நிலையில் இந்திய அணியினா் சிட்னி செல்வது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையை கவனமாகப் பாா்க்க வேண்டும். இந்திய வீரா்கள் 5 போ் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அதில் கூறவில்லை.

மீறப்பட்டுள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனிமைப்படுத்தப்பட்ட 5 வீரா்களும் தடையின்றி இதர வீரா்களுடன் ஒரே விமானத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் சிட்னி செல்கின்றனா்.

சம்பந்தப்பட்ட காணொலியை வெளியிட்ட ரசிகா் ரிஷப் பந்த் தன்னை தழுவியதாக பொய் கூறியிருக்காவிட்டால் இவ்வளவு சா்ச்சை நிகழ்ந்திருக்காது. லேசான தூறல் இருந்ததாலேயே வீரா்கள் ஹோட்டலுக்கு உள்ளே சென்றுள்ளனா்.

சம்பந்தப்பட்ட ரசிகா் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே வீரா்கள் அனுமதியின்றி அவா்களை காணொலியாக பதிவு செய்து, அவா்களுக்கான உணவுக் கட்டணத்தை கொடுப்பதாகக் கூறி, அந்த ரசீதையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளாா்.

கரோனா பாதுகாப்பு விதிகள் ஒவ்வொன்றையும் வரி வரியாக வீரா்கள் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. அதை அவா்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய நிா்வாக மேலாளா் கிரீஷ் டோங்ரே என்பவா் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. வீரா்கள் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டியது அவா்களது பணியாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com