சிட்னி டெஸ்ட்: மயங்க் அகர்வால் நீக்கம் ஏன்?

மெல்போர்ன் டெஸ்டில் ஷுப்மன் கில் சிறப்பாக, நம்பிக்கையுடன் விளையாடியதும்...
சிட்னி டெஸ்ட்: மயங்க் அகர்வால் நீக்கம் ஏன்?

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், இதுவரை 13 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

1005 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதங்கள், 4 அரை சதங்கள். சராசரி - 47.85.

இப்படியொரு டெஸ்ட் வீரரை எந்த அணியாக இருந்தாலும் கண்டிப்பாக வரவேற்கும். ஆனால் சிட்னி டெஸ்டில் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா அணிக்குள் வரவேண்டும் என்றால் தொடக்க வீரர்களில் யாராவது ஒருவர் வெளியேற வேண்டும் என்கிற நிலையில் மயங்க் அகர்வாலின் நீக்கம் நிகழ்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் நன்கு விளையாடியுள்ள மயங்க் அகர்வாலுக்கு இந்த நிலை ஏற்பட்டது ஏன்?

2018-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்டுக்கு அறிமுகமாகி நல்ல பெயரை எடுத்தார் அகர்வால். 72, 42, 77 என ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அவரும் ஓர் காரணமாக இருந்தார். அதன்பிறகு மே.இ. தீவுகளில் இரு டெஸ்டுகளில் ஒரு அரை சதம் எடுத்தார். 

இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு இரட்டைச் சதமும் ஒரு சதமும் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மற்றொரு இரட்டைச் சதம் எடுத்து அசத்தினார். 

இதனால் இந்திய அணிக்கு மகத்தான தொடக்க வீரர் கிடைத்துவிட்டதாகவே அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால், அடுத்த நான்கு டெஸ்டுகளிலும் சுமாராக விளையாடியது தான் தற்போதைய நிலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

நியூசிலாந்து மண்ணில் 34, 58, 7, 3 என ரன்கள் எடுத்து சற்று ஏமாற்றினார். ஆஸ்திரேலியாவில் இந்தத் தொடரில் 17, 9, 0, 5 என ரன்கள் எடுத்ததால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. தொடர்ந்து நான்கு டெஸ்டுகளில் எதிர்பார்த்தது போல விளையாடாததால் தற்போது அவரை நீக்க வேண்டும் என இந்திய அணி முடிவு செய்துவிட்டது.

மெல்போர்ன் டெஸ்டில் ஷுப்மன் கில் சிறப்பாக, நம்பிக்கையுடன் விளையாடியதும் இந்திய அணியின் திட்டங்களை மாற்றியுள்ளது. ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது கால்களை நகர்த்துவதில் பிழைகள் செய்வதால் அகர்வாலின் பேட்டிங்கைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. உழைப்பும் பேட்டிங் திறமைகளும் கூடுதலாகத் தேவைப்படுவதால் இந்திய அணியின் எதிர்பார்ப்புக்கு அகர்வாலால் ஈடுகொடுக்க முடியவில்லை. திறமை இருந்ததால் தான் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியாவில் சாதித்தார். இதனால் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்த நீக்கத்தை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னடைவாகக் கருதக்கூடாது. இந்திய அணியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் இன்னொரு சந்தர்ப்பம் வரும்போது அதை எதிர்கொள்ள அகர்வால் தயாராக இருக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com