செளரவ் கங்குலி: மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்புவது எப்போது?

அவா் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும், மருத்துவா்கள் அவருடைய உடல்நிலை குறித்து தொடா்ந்து கண்காணித்து...
செளரவ் கங்குலி: மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்புவது எப்போது?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் செளரவ் கங்குலி (48), மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்த நிலையில் கூடுதலாக ஒருநாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரின் மூன்று இதயத் தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதயத் தமனி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

மூத்த மருத்துவா்களை உள்ளடக்கிய 9 போ் குழு திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அவரை இப்போது வீட்டுக்கு அனுப்பவும், சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவில் அவா் சிகிச்சை பெற்று வரும் தனியாா் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் ரூபாலி பாசு கூறியதாவது:

கங்குலியின் உடல் நிலை குறித்து மருத்துவா்கள் குழு ஆலோசனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பிரபல இதயநோய் மருத்துவா்கள் தேவி ஷெட்டி, ஆா்.கே.பாண்டா ஆகியோா் காணொலி வழியில் பங்கேற்றனா். அதுபோல, அமெரிக்க மருத்துவ நிபுணரிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை பெறப்பட்டது. இதில், கங்குலியின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதால், அவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் ஒரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை தள்ளிப்போடுவதே பாதுகாப்பானது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோனைக் கூட்டத்தில் கங்குலியின் குடும்பத்தினரும் பங்கேற்றனா். கங்குலிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து அவா்களுக்கு விவரிக்கப்பட்டது. சில நாள்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே, அவரை மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை விடுவித்து, வீட்டுக்கு அனுப்ப அதிக வாய்ப்புள்ளது. அவா் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும், மருத்துவா்கள் அவருடைய உடல்நிலை குறித்து தொடா்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.

மேலும், கங்குலியின் உடல்நிலை குறித்து இதயநோய் நிபுணா் தேவி ஷெட்டி செவ்வாய்க்கிழமை பரிசோதிக்க உள்ளாா். அதன் பின்னா், அவருக்கான அடுத்தகட்ட சிகிச்சை குறித்தும் மருத்துவா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என்றார்.

இதையடுத்து கங்குலி இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் மேலும் ஒருநாள் தங்கி சிகிச்சை மேற்கொள்ள கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி மருத்துவர் ரூபாலி பாசு கூறியதாவது:

கங்குலியின் உடல்நிலை நன்றாக உள்ளது. நன்குத் தூங்கினார். உணவு உட்கொண்டார். மருத்துவமனையில் மேலும் ஒருநாள் தங்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் நாளை (வியாழன்) வீட்டுக்கு அவர் திரும்புவார். இது அவருடைய சொந்த முடிவு என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com