சிட்னி டெஸ்ட்: தேசிய கீதம் ஒலிக்கும்போது கண்ணீர் விட்ட சிராஜ்!

அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள்...
சிட்னி டெஸ்ட்: தேசிய கீதம் ஒலிக்கும்போது கண்ணீர் விட்ட சிராஜ்!

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள், சிராஜுக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

இதுபற்றி முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியதாவது: சிறிய அளவிலான ரசிகர்களோ, ரசிகர்கள் இல்லாமல் போனாலோ, இந்தியாவுக்காக விளையாடுவதை விடவும் பெரிய ஊக்கம் கிடையாது. ஒரு பிரபலம் சொன்னது போலத்தான், நாம் ரசிகர்களுக்காக விளையாடுவதில்லை, நாட்டுக்காக விளையாடுகிறோம் என்றார். 

முன்னாள் வீரர் முகமது கயிப் கூறியதாவது: இந்தப் படத்தை சிலர் நினைவில் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அவர் சிராஜ் முகமது. தேசிய கீதம் என்பது அவருக்கு இந்தளவு முக்கியமானது என்றார். 

26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார்.

சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com