சிட்னி டெஸ்டில் இந்திய அணிக்கு மகத்தான நாள்: ஆஸ்திரேலியா 338, இந்தியா 96/2

100 பந்துகளில் அரை சதமெடுத்த ஷுப்மன் கில்...
சதமடித்த ஸ்மித்
சதமடித்த ஸ்மித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி, 2-ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. லபுசான் 67, ஸ்மித் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்துள்ளது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். லபுசான் 91 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, தேநீர் இடைவேளையின்போது 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தது. கில் 14, ரோஹித் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்திய அணியின் இன்னிங்ஸில், 22 ரன்கள் எடுத்திருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் லயன் பந்தில் சிக்ஸர் அடித்தார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு வேறு எந்த வீரரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 சிக்ஸர்கள் கூட அடித்ததில்லை. 

பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் அருமையாக விளையாடினார்கள். அதிலும் இருவரும் புல் ஷாட்களை நன்கு விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார்கள். ஷுப்மன் கில்லின் ஒவ்வொரு ஷாட்டும் அவர் மீதான மதிப்பை அதிகரித்தன. மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிய ரோஹித் சர்மா, ஒரு தவறான ஷாட்டால் 26 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 100 பந்துகளில் அரை சதமெடுத்த ஷுப்மன் கில், மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். பிறகு விளையாடிய புஜாராவும் ரஹானேவும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

2-ம் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 9, ரஹானே 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 242 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com