டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த ஸ்மித், அதை குறைந்த இன்னிங்ஸில் நிகழ்த்தி சாதனை செய்துள்ளார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்துள்ளது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 25 இன்னிங்ஸில் 8 சதங்களை ஸ்மித் அடித்துள்ளார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (30 இன்னிங்ஸ்), ரிச்சர்ட்ஸ் (41 இன்னிங்ஸ்), பாண்டிங் (51 இன்னிங்ஸ்) ஆகியோரும் இந்தியாவுக்கு எதிராக 8 சதங்களை அடித்துள்ளார்கள். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த ஸ்மித், அதை குறைந்த இன்னிங்ஸில் நிகழ்த்தி சாதனை செய்துள்ளார். 

ஐசிசி தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ஸ்மித், 27 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி, கிரீம் ஸ்மித், ஆலன் பார்டர் என 27 டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். 

2017-ல் தர்மசலா டெஸ்டில் ஸ்மித் அடித்தார். அதன்பிறகு இந்தியாவுக்கு எதிரான 11 முடிவடைந்த இன்னிங்ஸில் எந்தவொரு ஆஸி. பேட்ஸ்மேனாலும் சதமடிக்க முடியவில்லை. அந்தக் குறையை ஸ்மித் இன்று சரிசெய்து விட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com