ஜடேஜாவுக்குக் காயம்: பந்துவீச வாய்ப்புண்டா?

ஜடேஜாவுக்குக் காயம்: பந்துவீச வாய்ப்புண்டா?

பேட்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குப் பெருவிரலில் காயம் ஏற்பட்டது...

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கில், புஜாரா தலா 50 ரன்கள் எடுத்தார்கள். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகிய மூவரும் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியுள்ளது. 

பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் காயம் ஏற்பட்டதால் வலி தாங்காமல் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் களமிறங்கவில்லை. ரிஷப் பந்துக்குப் பதிலாக சஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். ரிஷப் பந்துக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. 

இந்நிலையில் ஜடேஜா பேட்டிங் செய்தபோது அவருடைய இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பேட்டிங் செய்தாலும், ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. ஜடேஜாவுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் ஃபீல்டிங் செய்தார். இந்நிலையில் ஜடேஜாவின் காயம் பற்றி பிசிசிஐ கூறியதாவது:

பேட்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குப் பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஸ்கேன் பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்கேனில் பெரிய அளவில் காயமில்லை என்று தெரிந்தால் நாளைய ஆட்டத்தில் ஜடேஜா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com