டிராவில் முடிந்தது சிட்னி டெஸ்ட்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
டிராவில் முடிந்தது சிட்னி டெஸ்ட்


சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்தப் போட்டியில் 407 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தோல்வியிலிருந்து தப்பியது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

3-ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 226 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 131 ரன்களும், மார்னஸ் லபுசான்196 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் எடுத்தனர். 

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 100.4 ஓவர்களில் 244 ரன்கள் சேர்த்தது. ஷுப்மன் கில், சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் தலா 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேஸில்வுட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணி 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 87 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

கேமரூன் கிரீன் 84, ஸ்டீவன் ஸ்மித் 81, மார்னஸ் லபுசான் 73 ரன்கள் எடுத்தனர். 
இந்திய தரப்பில் நவ்தீப் சைனி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 407 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 

5-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 102 ரன்களை எட்டியபோது கேப்டன் அஜிங்க்ய ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரஹானே ஆட்டமிழந்தபோது இந்தியா தோல்வியடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரிஷப் பந்த் 97: ஆனால் சேத்தேஷ்வர் புஜாரா-ரிஷப் பந்த் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மிக மோசமான நிலையில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 118 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் சேர்த்த நிலையில், லயன் பந்துவீச்சில் கம்மின்ஸிடம் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து புஜாரா 205 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சேர்த்து வெளியேற, மீண்டும் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால், 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஹனுமா விஹாரி-அஸ்வின் ஜோடி அருமையான தடுப்பாட்டத்தால், ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவை தகர்த்தது. 

நங்கூரமாக களத்தில் நின்ற இந்த ஜோடியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும், கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 

இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டநேர முடிவில் இந்தியா 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. விஹாரி-அஸ்வின் ஜோடி 42.4 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தது. 

ஹனுமா விஹாரி 161 பந்துகளில் 23, அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

ஸ்கோர் விவரம்

முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 
மொத்தம்: 338
(ஸ்டீவன் ஸ்மித் 131, மார்னஸ் லபுசான் 91, வில் புகோவ்ஸ்கி 62, ரவீந்திர ஜடேஜா 4வி/62). 

இந்தியா
மொத்தம்: 244
(ஷுப்மன் கில் 50, சேத்தேஷ்வர் புஜாரா 50, ரிஷப் பந்த் 36,  பட் கம்மின்ஸ் 4வி/29, ஜோஷ் ஹேஸில்வுட் 2வி/43).

2-ஆவது இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா-312/6 டிக்ளேர் 
(கேமரூன் கிரீன் 84, ஸ்டீவன் ஸ்மித் 81, மார்னஸ் லபுசான் 73,  நவ்தீப் சைனி 2வி/54, அஸ்வின் 2வி/95).

இந்தியா
ரோஹித் சர்மா (சி) ஸ்டார்க் (பி) கம்மின்ஸ்  - 52 (98)
ஷுப்மன் கில் (சி) பெய்ன் (பி) ஹேஸில்வுட் -  31 (64)
சேத்தேஷ்வர் புஜாரா (பி) ஹேஸில்வுட்  - 77 (205)
அஜிங்க்ய ரஹானே (சி) வேட் (பி) லயன் - 4 (18)
ரிஷப் பந்த் (சி) கம்மின்ஸ் (பி) லயன் - 97 (118)
ஹனுமா விஹாரி நாட் அவுட் - 23 (161)
அஸ்வின் நாட் அவுட் - 39 (128)
உபரிகள்  - 11

மொத்தம் 
(131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ) - 334

விக்கெட் வீழ்ச்சி: 1-71 (ஷுப்மன் கில்), 2-92 (ரோஹித்), 3-102 (ரஹானே), 4-250 (ரிஷப் பந்த்), 5-272 (புஜாரா).

பந்துவீச்சு: மிட்செல் ஸ்டார்க் 22-6-66-0, ஜோஷ் ஹேஸில்வுட் 26-12-39-2, பட் கம்மின்ஸ் 26-6-72-1, நாதன் லயன் 46-17-114-2, கேமரூன் கிரீன் 7-0-31-0, மார்னஸ் லபுசான் 4-2-9-0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com