இந்தியா-ஆஸ்திரேயா 4-ஆவது டெஸ்ட்: பிரிஸ்பேனில் நாளை தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா-ஆஸ்திரேயா 4-ஆவது டெஸ்ட்: பிரிஸ்பேனில் நாளை தொடக்கம்

பிரிஸ்பேன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி போட்டியை டிரா செய்தது.
தொடர் காயம்: இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணியைப் பொருத்தவரையில் முகமது சமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி உள்ளிட்ட வீரர்கள் காயம் அடைந்து தொடரிலிருந்து விலகியுள்ளனர். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எனவே, இந்தப் போட்டியில் இந்திய அணி அதிக இளம் வீரர்களுடன் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா-ஷுப்மன் கில் ஜோடி சிறப்பாக ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியமாகும். மிடில் ஆர்டரில் சேத்தேஷ்வர் புஜாரா, கேப்டன் அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
கடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு பின்வரிசையில் பலம் சேர்த்த ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தப் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஹனுமா விஹாரிக்குப் பதிலாக மயங்க் அகர்வால் அல்லது பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 வேகப்பந்து வீச்சாளர்கள்: பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், நடராஜன் என 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். ஒருவேளை அவர் முழு உடற்தகுதியோடு இல்லாவிட்டால், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
மிரட்டும் லபுசான், ஸ்மித்: ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரையில் ஒரேயொரு மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்ப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் மிக வலுவாக உள்ளது. மார்னஸ் லபுசான், ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ வேட், டிம் பெய்ன், கேமரூன் கிரீன் ஆகியோர் அந்த அணிக்கு வலு சேர்க்கின்றனர். குறிப்பாக, மார்னஸ் லபுசான், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகின்றனர். மார்னஸ் லபுசான் 293 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 222 ரன்களும் குவித்துள்ளனர். அவர்களின் அபார ஆட்டம் பிரிஸ்பேனிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரையில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட் கூட்டணி மிகப்பெரிய பலமாக திகழ்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு கூட்டணி. சுழற்பந்து வீச்சில் நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கிறார்.


ஆஸி.யின் கோட்டை பிரிஸ்பேன்

4-ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள பிரிஸ்பேன் காபா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். மேலும், ஆஸ்திரேலியாவின் கோட்டையாக கருதப்படுகிறது. 1988 முதல் தற்போது வரையில் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா தோற்றதில்லை. கடந்த 33 ஆண்டுகளில் பிரிஸ்பேன் மைதானத்தில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி, அதில் 24-இல் வெற்றி கண்டுள்ளது. 7 போட்டிகளில் டிரா செய்துள்ளது.
அதேநேரத்தில் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதுவரை வென்றதில்லை. அங்கு 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, ஒரு போட்டியில் டிரா செய்துள்ளது. எஞ்சிய போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இந்திய அணிக்கு பிரிஸ்பேன் மைதானம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஒருவேளை இந்திய அணி இந்தப் போட்டியை டிரா செய்யுமானால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடியும். கடைசியாக 2018-இல் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி வென்றுள்ளதால், இந்த முறை தொடரை சமனில் முடிக்கும்பட்சத்தில் கோப்பையை  தக்கவைத்துக் கொள்ளலாம்.


நாதன் லயனுக்கு 100-ஆவது டெஸ்ட்


பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு 100-ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-ஆவது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பெறுவார். ஷேன் வார்ன் 145 போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். கிளன் மெக்ராத் 124 போட்டிகளில் 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உத்தேச லெவன்

இந்தியா

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால்/பிரித்வி ஷா, அஸ்வின்/குல்தீப் யாதவ்/ வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், நடராஜன்.

ஆஸ்திரேலியா 

டேவிட் வார்னர்,  மார்கஸ் ஹாரிஸ்,  மார்னஸ் லபுசான், ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

போட்டி நேரம்: காலை 5
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், 
சோனி டென் 1, சோனி டென் 3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com