5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய முகமது சிராஜ்: கட்டியணைத்துப் பாராட்டிய பும்ரா! (விடியோ)

சிராஜை பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்றிருந்த பும்ரா, கட்டியணைத்துப் பாராட்டினார்...
5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய முகமது சிராஜ்: கட்டியணைத்துப் பாராட்டிய பும்ரா! (விடியோ)

பிரிஸ்பேன் டெஸ்டில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சிராஜைக் கட்டியணைத்துப் பும்ரா பாராட்டியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை, ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை. 5-ம் நாளில் மழை அனுமதித்தால் நமக்கு அட்டகாசமான தருணங்கள் காத்திருக்கின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ். 

சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

3-வது டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள், சிராஜுக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். தேசிய கீதம் ஒலித்தபோது எனது தந்தையை நினைத்துக் கொண்டேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் ஆசைப்படுவார். இன்று அவர் இருந்திருந்தால் நான் விளையாடுவதைப் பார்த்திருப்பார் என்றார் சிராஜ்

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிந்து ஓய்வறைக்குத் திரும்பிய சிராஜை பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்றிருந்த பும்ரா, கட்டியணைத்துப் பாராட்டினார். 

தனது 3-வது டெஸ்டில் விளையாடும் சிராஜ், அதற்குள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவுக்குத் தலைமை தாங்குபவராக உள்ளார். முதல் டெஸ்டில் 5 விக்கெடுகளும் 2-வது டெஸ்டில் 2 விக்கெட்டுகளும் எடுத்த சிராஜ் இந்த டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் என பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக இருந்து வருகிறார் சிராஜ். முக்கியப் பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையே தெரியாத அளவுக்குப் பங்களித்துள்ளார். இதனால் தான் சிராஜுக்கு அப்படியொரு பாராட்டைத் தெரிவித்துள்ளார் பும்ரா. இந்த அழகான தருணத்தைப் பாராட்டி சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவு எழுதியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com