
ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியதும் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்.
சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. 5 விக்கெட் எடுத்த பிறகு சிராஜ் கூறியதாவது: தன் மகன் விளையாடுவதை உலகமே பார்க்கும் என என் தந்தை விரும்பினார். (5 விக்கெட்டுகள் எடுத்த) இந்த நாளைப் பார்க்க அவர் இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அவருடைய வாழ்த்துகளால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியாது. என் தந்தை இறந்த பிறகு சூழல் கடினமாக இருந்தது. என்னுடைய தாயாரிடம் பேசி வலிமையை அடைந்தேன். என்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் தான் என்னுடைய கவனம் இருந்தது என்றார்.
இந்நிலையில் பிரிஸ்பேனிலிருந்து இந்திய வீரர்கள் இன்று இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள். தெலங்கானா ஷம்ஷபத் விமான நிலையத்தில் வந்திறங்கிய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், நேராக தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட காயர்தாபாத் இடுகாடுக்குச் சென்றார். அங்கு தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.
India's hero #Siraj paying homage at the grave of his father Mohd Ghouse who passed away when he was on tour outside the country; the son has returned after fulfilling the father's much cherished dream to see his son play for the country & make it win @ndtv @ndtvindia #MohdSiraj pic.twitter.com/X44GUc2WdX
— Uma Sudhir (@umasudhir) January 21, 2021