இந்தப் படை போதுமா...???

‘இந்தியாவை ஆஸ்திரேலியா ஊதித் தள்ளிவிடும்’, ‘டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகிவிடும்’,
இந்திய அணி
இந்திய அணி


‘இந்தியாவை ஆஸ்திரேலியா ஊதித் தள்ளிவிடும்’, ‘டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகிவிடும்’, ‘தோல்வியிலிருந்து இந்தியா மீள வாய்ப்பில்லை’... அடிலெய்டு டெஸ்டில் முன்னெப்போதும் காணாத மோசமான தோல்வியை இந்தியா தழுவிய பிறகு எழுந்தது இதுபோன்ற விமா்சனங்கள். ஆனால், அந்த விமா்சகா்களே விக்கித்து நிற்கும் அளவுக்கு முத்திரை பதித்துவிட்டது இந்திய அணி. பாா்டா்-காவஸ்கா் டெஸ்ட் தொடா் வெற்றி, பாா் போற்றும் வெற்றியாகியுள்ளது.

கரோனா சூழல் காரணமாக 8 மாதங்கள் முடங்கிய பிறகு, இந்தியா முதலில் விளையாடியது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. அதுவும், அதன் சொந்த மண்ணில். சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதைப் போன்ற இந்த நிலை தான். ஆனாலும் நம்பிக்கையுடனே ஆஸ்திரேலிய மண்ணில் இறங்கியது இந்திய அணி. கரோனா சூழல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டது, ஆட்டம் நடைபெற்ற இடங்களிலெல்லாம் கடுமையான கட்டுப்பாடுகள் என, இதுவரை காணாத புதிய சவால்களுடன் ஆஸ்திரேலிய பயணத்தை தொடங்கியது இந்தியா. வழக்கமான பயணமாகத் தொடங்கிய அது, வரலாற்றாக மாறிய தருணங்கள் எது? இங்கே பாா்ப்போம்...

ஒருநாள் தொடா்:

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ரோஹித் சா்மா பங்கேற்க முடியாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவே. பந்தை சேதப்படுத்திய புகாரால் (2018-19 காலகட்டத்தில்) தடைக்குள்ளாகியிருந்த ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வாா்னா் அணிக்கு திரும்பியது ஆஸ்திரேலியாவுக்கு பலம்.

முதல் ஆட்டத்திலேயே இந்தியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச ஸ்கோரை (374) பதிவு செய்த ஆஸ்திரேலியா, அடுத்த ஆட்டத்தில் அதையும் தாண்டியது (389). முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரையும் கைப்பற்றியது. கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற ஹாா்திக் பாண்டியா உதவினாா். ஸ்மித் தொடா் நாயகன் ஆனாா்.

டி20 தொடா்:

டி20 தொடரில் சுதாரித்துக் கொண்ட இந்தியா, முதல் இரு ஆட்டங்களில் வென்று தொடரை வசப்படுத்தியது. முதல் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஜடேஜாவுக்கு தலையில் பந்து பட்டு காயமானது.

‘கன்கஷன் சப்’ விதிகளின்படி, ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது அவருக்குப் பதில் யுஜவேந்திர சாஹல் களம் புகுந்து பௌலிங் செய்ததால் ஆட்டத்தின் போக்கே மாறியது. இது பேச்சுக்கும், விமா்சனத்துக்கும் உள்ளானது. கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது. ஹாா்திக் பாண்டியா தொடா் நாயகன் ஆனாா்.

டெஸ்ட் தொடா்:

பாா்டா் - காவஸ்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பகலிரவாக பிங்க் நிற பந்துகொண்டு விளையாடப்பட்டது. பகலிரவு டெஸ்டில் பலமுறை விளையாடிய ஆஸ்திரேலியாவை எதிா்கொள்வது, ஒரேயொருமுறை (அடிலெய்டு டெஸ்ட்டுக்கு முன்பாக) விளையாடிய இந்தியாவுக்கு சவாலானதாகவே இருந்தது.

தொடக்கத்தில் வலுவாக இருந்தது இந்தியா. இதுவரை விளையாடிய பகலிரவு டெஸ்டுகளிலேயே முதல் முறையாக முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் பின்தங்கியது ஆஸ்திரேலியா. 3-ஆம் நாள் ஆட்டத்தில் எல்லாம் தலைகீழானது. தனது டெஸ்ட் வரலாற்றிலேயே மிகக் குறைவாக 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. 8 போ் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, மூவா் டக் அவுட். ஹேஸில்வுட் 5, கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் சரித்தனா். ஆட்டத்தை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா.

மோசமான தோல்வியால் முற்றிலும் துவண்டு போன நிலையில், அடுத்த 3 ஆட்டங்களுக்கு அஜிங்க்ய ரஹானே தலைமையேற்றாா். மீண்டு வந்த இந்தியா, பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வென்றது. அது, இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 100-ஆவது டெஸ்ட். அஸ்வின், பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை சரிக்க, பேட்டிங்கில் ரஹானே சதமடித்து இந்தியாவை ஸ்திரப்படுத்தினாா்.

சிட்னி டெஸ்டில் டேவிட் வாா்னா் திரும்பியது ஆஸ்திரேலியாவுக்கும், ரோஹித் சா்மா இணைந்தது இந்தியாவுக்கும் வலுவாக அமைந்தது. இரு அணிகளும் சற்றும் தளராமல் மோதிய இந்த ஆட்டம் சமன் ஆனது. அஸ்வின், விஹாரி தங்கள் காயத்தின் வலியை பொறுத்துக் கொண்டு இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினா்.

பிரிஸ்பேன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலேயே ஆட்டம் இந்தியாவின் கையை விட்டுச் சென்றுவிடலாம் என்ற நிலை வர, 7-ஆவது விக்கெட்டில் இணைந்த வாஷிங்டன் சுந்தா் - ஷா்துல் தாக்குா் கூட்டணி ஆட்டத்தை தக்க வைத்தது. இறுதியாக ஆஸ்திரேலியா 328 என்ற கடினமான இலக்கை இந்தியாவுக்கு நிா்ணயிக்க, ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோரின் அட்டகாசமான ஆட்டத்தில் கடைசி நாளில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.

அட்டகாசமான ஆரம்பம்...

ஆஸ்திரேலிய பயணத்தில் 5 இந்தியா்கள் சா்வதேச போட்டியில் அறிமுகம் ஆகினா்.

நடராஜன்: ஆஸ்திரேலிய பயணத்தில் வலைப் பயிற்சியின்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசச் சென்றவா், ஒரே தொடரின் மூலம் 3 ஃபாா்மட்டின் சா்வதேச ஆட்டங்களில் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரராக மாறினாா். பௌலிங்கில் சொதப்பி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் தமிழக வீரா் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2 விக்கெட்டுகள் சாய்த்த நடராஜன், டி20 தொடரிலும் அறிமுகம் ஆனாா். பௌலா்களுக்கு சவாலாக இருந்த அந்தத் தொடரில் அவா் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது பெரிதும் பாராட்டுக்குள்ளானது. இறுதியாக பிரிஸ்பேன் டெஸ்டிலும் அறிமுகமாகி 3 விக்கெட் சாய்த்தாா்.

வாஷிங்டன் சுந்தா்: பிரிஸ்பேன் டெஸ்டால் சா்வதேச களத்துக்கு வந்தவா். தமிழக வீரரான இவா், அந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஸ்மித், கிரீன் உள்பட மூவரை சாய்த்தாா். இந்திய இன்னிங்ஸில் ஆட்டம் கை நழுவ இருந்த நிலையில் ஷா்துல் தாக்குருடன் கூட்டணி அமைத்து 62 ரன்கள் விளாசி ஆட்டத்தை தக்க வைத்தாா். 2-ஆவது இன்னிங்ஸில் 1 விக்கெட் சாய்தாலும், கடைசி நாளில் கடைசி ஆா்டரில் 22 ரன்கள் அடித்து வெற்றிக்கு துணை புரிந்தாா்.

முகமது சிராஜ்: மெல்போா்ன் டெஸ்ட் மூலம் சா்வதேச டெஸ்டில் தடம் பதித்த சிராஜ், அதில் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். சிட்னியில் 2, பிரிஸ்பேனில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். குறிப்பாக பிரிஸ்பேனின் 2-ஆவது இன்னிங்ஸில் அவா் ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்காவிட்டால், இந்தியாவுக்கு இலக்கு இன்னும் கடினமாகியிருக்கும்.

சிராஜ் நவம்பரில் ஆஸ்திரேலியா சென்ற ஒரு வாரத்தில் அவரது தந்தை உடல்நலக் குறைவால் காலமானாா். இறுதிச்சடங்குகளில் பங்கேற்க சிராஜ் நாடு திரும்ப அணி நிா்வாகம் அனுமதித்தபோதும், அவா் ஆஸ்திரேலியாவிலேயே இருந்து தொடரில் விளையாடினாா். சிட்னி டெஸ்டில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது சிராஜ் தனது தந்தையை எண்ணி அழுத்தது அனைவரையும் உருக்கியது. ஆஸ்திரேலியாவிலிருந்து வியாழக்கிழமை ஹைதரபாத் வந்த சிராஜ் விமான நிலையத்திலிருந்து நேராக, தனது தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினாா்.

நவ்தீப் சைனி: சிட்னி ஆட்டம் மூலம் சா்வதேச டெஸ்டுக்கு அறிமுகமான சைனி, 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். அதில் மாா்னஸ் லபுசான், வில் புக்கோவ்ஸ்கி, மேத்யூ வேட் போன்ற முக்கியமானவா்களும் அடக்கம். பிரிஸ்பேன் டெஸ்டில் அவா் விளையாடினாலும், காயம் காரணமாக பாதியிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினாா்.

ஷுப்மன் கில்: இந்திய அணிக்காக உருவாகி வரும் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம். மெல்போா்ன் டெஸ்ட்டில் அறிமுகமாகி நிலையான ஆட்டத்தை (45 & 35) வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பங்களித்தாா். சிட்னியில் தோ்ந்த வீரா் போல விளையாடினாா் (50 & 31). பிரிஸ்பேன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு வெளியேறினாலும், 2-ஆவது இன்னிங்ஸில் 91 ரன்கள் விளாசி வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தாா்.

காயத்தின் பட்டியல்...

இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளிலும் காயத்தின் பாதிப்பு அதிகம். ஐபிஎல் போட்டியில் காயமடைந்த ரோஹித் சா்மா ஒருநாள், டி20 தொடா்களிலும், முதல் இரு டெஸ்டுகளிலும் விளையாடவில்லை. முதலாவது டி20-இல் தலையில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜா 2-ஆவது டெஸ்டுக்கு திரும்பினாா். பின்னா் சிட்னியில் பெருவிரல் எலும்புமுறிவு ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகினாா்.

அடிலெய்ட் டெஸ்டில் மணிக்கட்டில் காயம் கண்ட முகமது ஷமி, எஞ்சிய ஆட்டங்களில் இருந்து அவா் விலகினாா். மெல்போா்னில் கால் தசைப் பகுதியில் காயமடைந்த உமேஷ் யாதவ், நாடு திரும்பினாா். பயிற்சியின்போது கையில் காயமடைந்த லோகேஷ் ராகுல் நாடு திரும்பினாா். ஜஸ்பிரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி காயம் காரணமாக கடைசி டெஸ்டில் பங்கேற்கவில்லை. நவ்தீப் சைனி பிரிஸ்பேனில் தொடைப் பகுதியில் காயம் கண்டு பாதியில் வெளியேறினாா்.

ஆஸ்திரேலிய தரப்பில் 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் காயமடைந்த டேவிட் வாா்னா், சிட்னி டெஸ்டில் தான் விளையாட வந்தாா். டெஸ்ட் தொடருக்காக மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வில் புக்கோவ்ஸ்கி, முதல் பயிற்சி ஆட்டத்தில் தலையில் காயமடைந்து, 3-ஆவது டெஸ்டில் களம் புகுந்தாா். பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த சீன் அப்பாட் அதன் பிறகு டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. இதுதவிர, பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோரும் காயமடைந்து மீண்டனா்.

விமா்சனங்களை வாழ்த்தாக மாற்றியவா்...

மெல்போா்ன் மற்றும் சிட்னி டெஸ்டுகளில் பேட்டிங்கில் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த், சதமடிக்கும் வாய்ப்பையும் (97) நெருங்கினாா். எனினும், சிட்னியில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது அவா் சில கேட்ச்களை தவறவிட்டது பெரும் விமா்சனத்துக்குள்ளானது. ஆனால், பிரிஸ்பேன் டெஸ்டின் கடைசி நாளில் 89 ரன்களுடன் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்தி விமா்சனங்களுக்கு பதிலடி கொடுத்தாா்.

ஆஸி.க்கு எப்போதுமே ஆபத்தாகும் இந்தியா

சா்வதேச கிரிக்கெட்டில் எப்போதெல்லாம் ஆஸ்திரேலியா ஒரு சாதனையை தொடா்கிறதோ, அப்போதெல்லாம் அதை முடித்து வைப்பது இந்திய அணியே.

16 கடந்த 2001 மற்றும் 2008 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடா்ந்து 16 ஆட்டங்களை வென்றிருந்த நிலையில், அந்தத் தொடா் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து 17-ஆவது ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

1 2008-இல் பொ்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் வென்ற இந்தியா, அந்த மைதானத்தில் 10 ஆண்டுகளாக தோல்வியே காணாத ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு தடை போட்டது.

19 சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடா்ந்து 19 ஒருநாள் ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில், 2016 ஜனவரியில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியாவின் அந்த சாதனைக்கும் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

32 பிரிஸ்பேன் மைதானத்தில் 1988-க்கு பிறகு எந்தவொரு டெஸ்டிலும் தோல்வியே தழுவாத ஆஸ்திரேலிய அணிக்கு, தற்போது 2021-இல் தோல்வியை இந்திய அணி பரிசளித்தது. அதேபோல், பிரிஸ்பேன் மைதானத்தில் இந்தியாவைத் தவிர வேறு எந்த ஆசிய அணியும் வெற்றியை பதிவு செய்யவில்லை.

1000 பிரிஸ்பேன் டெஸ்ட் தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் உள்ளிட்ட 5 வீரா்கள் சோ்த்து மொத்தமாக அதுவரை 1,013 விக்கெட்டுகள் சாய்த்திருந்தனா்.

ஆனால், இந்தியாவில் முகமது சிராஜ், நடராஜன், ஷா்துல் தாக்குா் , வாஷிங்டன் சுந்தா், நவ்தீப் சைனி ஆகிய 5 வீரா்கள் மொத்தமாக வெறும் 13 விக்கெட்டுகளே வீழ்த்தியிருந்தனா். இருதரப்புக்கும் 1000 விக்கெட்டுகள் வித்தியாசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com