ரூட் 186 ரன்கள்: சமநிலையில் 2-வது டெஸ்ட்

​இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 381 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரூட் 67 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோவ் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பேர்ஸ்டோவ் கூடுதலாக 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் எம்புல்டேனியா சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸும் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 132 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, கேப்டன் ரூட்டுடன் ஜாஸ் பட்லர் இணைந்தார். இந்த இணை பாட்னர்ஷிப் அமைத்தது. ரூட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தத் தொடரில் மேலும் ஒரு சதத்தை அடித்தார். மறுமுனையில் பட்லரும் அரைசதத்தை எட்டினார்.

பட்லர் அரைசதம் அடித்த கையோடு மெண்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஜோ ரூட்டே பெரிதளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். சாம் கரண் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டொமினிக் பெஸ் மட்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரூட்டுக்கு ஒத்துழைப்பு தந்தார். அவர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்க் வுட்டையும் வந்த வேகத்தில் 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார் எம்புல்டேனியா.

தனிநபராகப் போராடி வந்த ஜோ ரூட் இந்தத் தொடரின் 2-வது இரட்டைச் சதத்தை நெருங்கினார்.

ஆனால், 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரூட் ரன் அவுட் ஆனார். ரூட் விக்கெட்டுடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

3-வது ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்து இன்னும் 42 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இலங்கைத் தரப்பில் எம்புல்டேனியா மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com