இலங்கையில் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ள இங்கிலாந்து அணி!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இலங்கை அணி. 
டெஸ்ட் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
டெஸ்ட் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இலங்கை அணி. 

இலங்கையின் காலே நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 139.3 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாசினாா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இங்கிலாந்து  அணி முதல் இன்னிங்ஸில் 116.1 ஓவர்களில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 186 ரன்களும் பட்லர் 55 ரன்களும் எடுத்தார்கள். இலங்கையின் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை 2-வது இன்னிங்ஸில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்தது. அந்த அணி 35.5 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது. டாம் பெஸ் 4, ஜாக் லீச் 4, ஜோ ரூட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தார்கள். 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளும் எடுத்ததால் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு ஓர் அணியின் முதல் இன்னிங்ஸ் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும் 2-வது இன்னிங்ஸ் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும் முழுமையாக எடுத்ததில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 89 ரன்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. பிறகு ஜோடி சேர்ந்த சிப்லி - பட்லர் ஜோடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது. சிப்லி 56, பட்லர் 46 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது. இலங்கையில் ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ரூட் வென்றுள்ளார்.

இதையடுத்து இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com