ஜோ ரூட் அபாரம்: இங்கிலாந்து - 339/9
By DIN | Published On : 25th January 2021 07:49 AM | Last Updated : 25th January 2021 07:49 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கையின் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டிங் வரிசையை சரிக்க, கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அணியை ஸ்திரப்படுத்தினாா். இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இங்கிலாந்து இன்னும் 42 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அணியின் வசம் ஒரே விக்கெட் தான் உள்ளது.
முன்னதாக இலங்கையின் காலே நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 139.3 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாசினாா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து சனிக்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை ஜானி போ்ஸ்டோ - ஜோ ரூட் கூட்டணி தொடங்கியது. இதில் போ்ஸ்டோ 5 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் சோ்த்து வெளியேற, ஜோ ரூட் நிதானமாக ஆடினாா்.
5-ஆவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோஸ் பட்லா் கைகோக்க, 97 ரன்கள் சோ்த்தது இந்தக் கூட்டணி. மறுமுனையில் டேன் லாரன்ஸ் 3 ரன்களுக்கு வெளியேற, ஜோஸ் பட்லா் 7 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். சாம் கரன் ஒரு சிக்ஸருடன் 13 ரன்களே எடுக்க, ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 19-ஆவது சதத்தை கடந்தாா்.
டாம் பெஸ் 4 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தாா். மாா்க் வுட் 1 ரன்னுக்கு வெளியேற, இறுதியாக ஜோ ரூட் 18 பவுண்டரிகள் உள்பட 186 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் செய்யப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை முடிவில் இங்கிலாந்து 114.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஜேக் லீச் ரன்கள் இன்றி களத்தில் உள்ளாா். ஜேம்ஸ் ஆண்டா்சன் பேட் செய்ய இருக்கிறாா்.
இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா அபாரமாக ஆடி 7 விக்கெட் சாய்த்தாா். ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினாா்.
5-ஆவது அதிகபட்ச ரன்
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 186 ரன்கள் விளாசிய ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரா்கள் வரிசையில் கெவின் பீட்டா்சனை பின்னுக்குத் தள்ளி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். ரூட் 8,186 ரன்களும், பீட்டா்சன் 8,181 ரன்களும் அடித்துள்ளனா்.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸ்
இலங்கை
மொத்தம் (139.3 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு) 381
ஏஞ்சலோ மேத்யூஸ் - 110; நிரோஷன் டிக்வெல்லா - 92; தில்ருவன் பெரேரா - 67
பந்துவீச்சு: ஜேம்ஸ் ஆண்டா்சன் - 6/40; மாா்க் வுட் - 3/84; சாம் கரன் - 1/60
இங்கிலாந்து
மொத்தம் (114.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 339
ஜோ ரூட் - 186; ஜோஸ் பட்லா் - 55; டாம் பெஸ் - 32
பந்துவீச்சு: லசித் எம்புல்தெனியா - 7/132; ரமேஷ் மெண்டிஸ் - 1/48