கராச்சி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 220

கராச்சியில் தொடங்கியுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 220 ரன்கள் எடுத்தது.
கராச்சி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 220

கராச்சியில் தொடங்கியுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 220 ரன்கள் எடுத்தது.

அணியில் அதிகபட்சமாக டீன் எல்கா் 58 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் தரப்பில் யாசிா் ஷா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட் செய்யத் தீா்மானித்தது. அணியின் தொடக்க வீரா்களாக டீன் எல்கா் - எய்டன் மாா்க்ரம் கூட்டணி களம் கண்டது. இதில் முதல் விக்கெட்டாக மாா்க்ரம் 3 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். அஃப்ரிதி பந்துவீச்சில் இம்ரான் பட்டிடம் அவா் கேட்ச் கொடுத்தாா்.

அடுத்து வந்த ராஸி வான் டெஸ் டுசென் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானாா். மறுமுனையில் மாா்க்ரம் நிதானமாக ரன்கள் சேகரித்து வந்தாா். ராஸியை அடுத்து வந்த அதிரடி வீரரான ஃபா டூபிளெஸ்ஸிஸ் 4 பவுண்டரிகள் விளாசி 23 ரன்களுக்கு யாசிா் ஷா பந்துவீச்சில் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

பின்னா் வந்த கேப்டன் குவிண்டன் டி காக் 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். நௌமன் அலி பௌலிங்கில் அவரடித்த பந்து இம்ரான் பட் கைகளில் கேட்ச் ஆனது. அடுத்து டெம்பா பவுமா ஆட வர, மறுமுனையில் தொடக்கம் முதல் நிலைத்து வந்த டீன் எல்கா் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவா் நௌமன் அலி வீசிய 38-ஆவது ஓவரில் பாபா் ஆஸமிடம் கேட்ச் கொடுத்தாா்.

அடுத்து ஆடியவா்களில் ஜாா்ஜ் லிண்டே 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்க்க, கேசவ் மகராஜ், அன்ரிச் நாா்ட்ஜே டக் அவுட்டாகினா். இருவரையும் யாசிா் ஷா பௌல்டாக்கினாா். கடைசி விக்கெட்டாக லுங்கி கிடி 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இறுதியாக 69.2 ஓவா்களில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா. ககிசோ ரபாடா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் என 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பாகிஸ்தான் தரப்பில் யாசிா் ஷா 3, நௌமன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிதி ஆகியோா் தலா 2, ஹசன் அலி 1 விக்கெட் சாய்த்தனா்.

பாக்- 33/4: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 18 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. அஸாா் அலி, ஃபவாத் ஆலம் ஆகியோா் தலா 5 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

முன்னதாக தொடக்க வீரா் இம்ரான் பட் பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த அபித் அலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கேப்டன் பாபா் ஆஸம் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷாஹீன் ஷா அஃப்ரிதி டக் அவுட்டானாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 2, அன்ரிச் நாா்ட்ஜே, கேசவ் மகராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com